வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகை பறிக்க முயன்ற வடமாநில ஆசாமி


வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகை பறிக்க முயன்ற வடமாநில ஆசாமி
x
தினத்தந்தி 8 Sept 2017 5:39 AM IST (Updated: 8 Sept 2017 5:39 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் கஸ்பாவில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகை முயன்ற வடமாநில ஆசாமியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

வேலூர்,

வேலூர் கஸ்பாவில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகை முயன்ற வடமாநில ஆசாமியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வடமாநில ஆசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

வேலூர் கஸ்பா பகுதியில் கடந்த சில மாதங்களாக வீட்டின் வெளிப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருட்டு போகும் சம்பவம் நடந்து வந்தது. அப்பகுதியில் 7–க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் வேலூர் தெற்கு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் கஸ்பாவில் உள்ள ஒரு வீட்டில் 35 வயது மதிக்கத்தக்க வடமாநில ஆசாமி திடீரென புகுந்தார். அப்போது வீட்டில் 40 வயது மதிக்கத்தக்க பெண் மட்டும் தனியாக இருப்பதை நோட்டமிட்ட வடமாநில ஆசாமி பெண்ணை தாக்கி அவர் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகேயுள்ள வீட்டில் வசிப்பவர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

இதையடுத்து வடமாநில ஆசாமி அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அவரை பொதுமக்கள் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் ஆசாமியின் கை, கால்களை பொதுமக்கள் கயிற்றால் கட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் போலீசார் 2 மணி நேரமாகியும் சம்பவ இடத்துக்கு வரவில்லை. இதையடுத்து அப்பகுதி வாலிபர்கள், வடமாநில ஆசாமியை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். போலீசார் வடமாநில ஆசாமியிடம் அவர் பெயர், ஊர் உள்பட எவ்வித விசாரணையும் செய்யவில்லை. அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

மாறாக வடமாநில ஆசாமியை அழைத்து வந்த வாலிபர்களிடம் போலீசார் கண்டிப்புடன் நடந்து கொண்டனர். வடமாநில ஆசாமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கும்படி வாலிபர்களிடம், போலீசார் கூறினார்கள். இதனால் வாலிபர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

சிறிது நேரத்துக்கு பின்னர் வாலிபர்கள், வடமாநில ஆசாமியை சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். வீடு புகுந்து பெண்ணை தாக்கிய வடமாநில ஆசாமியை பொதுமக்கள் பிடித்து கொடுத்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காத சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.


Next Story