வெள்ளக்காடான நடுவக்குறிச்சி கிராமம் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோட்டில் தஞ்சம் புகுந்தனர்


வெள்ளக்காடான நடுவக்குறிச்சி கிராமம் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோட்டில் தஞ்சம் புகுந்தனர்
x
தினத்தந்தி 9 Sept 2017 2:45 AM IST (Updated: 8 Sept 2017 9:11 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் பகுதியில் பெய்த கன மழையால் எதிரொலியாக வெள்ளம் புகுந்ததால் நடுவக்குறிச்சி கிராமம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

ஓட்டப்பிடாரம்,

ஓட்டப்பிடாரம் பகுதியில் பெய்த கன மழையால் எதிரொலியாக வெள்ளம் புகுந்ததால் நடுவக்குறிச்சி கிராமம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

கன மழை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், பசுவந்தனை, புதியம்புத்தூர், மணியாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மதியம் 3 மணிக்கு திடீர் மழை பெய்தது. இடியுடன் பெய்த இந்த கனமழை சுமார் 1½ மணி நேரம் நீடித்தது. இதனால் ஓட்டப்பிடாரம், கவர்னகிரி, வெள்ளாரம், புதியம்புத்தூர், முறம்பன், ஒட்டநத்தம் பகுதிகளில் உள்ள குளங்களுக்கு அதிக அளவில் தண்ணீர் சென்றன.

காட்டாற்று வெள்ளம்

புதியம்புத்தூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளநீர் புதியம்புத்தூருக்கும் நடுவக்குறிச்சிக்கும் இடையே உள்ள சிற்றோடை வழியாக சென்றது. அதிக அளவில் வெள்ள நீர் வந்ததால், சிற்றோடை பாலத்தின் மீது 3 அடிக்கு வெள்ள நீர் சென்றது. இந்த சிற்றோடை பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை என கூறப்படுகிறது.

வீடுகளை விட்டு...

இதனால் அந்த வழியாக சென்ற காட்டாற்று வெள்ள நீர், நடுவக்குறிச்சி கிராமத்திற்குள் புகுந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. காட்டாற்று வெள்ளம் மூலம் அடித்து வரப்பட்ட 10–க்கும் மேற்பட்ட பாம்புகளும், சில வீடுகளுக்குள் புகுந்தன. இதனால் அந்த கிராம மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி, சாலைக்கு வந்தனர். வீடுகளில் இருந்த பொருட்கள் பலத்த சேதமடைந்தன.

நடுவக்குறிச்சி கிராமம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்களில் சிலர் பக்கத்து கிராமங்களுக்கு சென்றனர். பெரும்பாலானோர் விடிய விடிய கிராமத்துக்கு அருகேயுள்ள மெயின் ரோட்டில் தங்கினர். வெள்ளத்தில் சிக்கிய கால்நடைகளை பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்டு மெயின்ரோடு பகுதியில் கட்டி வைத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த வெள்ளத்தால் தூத்துக்குடியில் இருந்து ஓட்டப்பிடாரம் செல்லும் ரோட்டில் தண்ணீர் தேங்கி கிடப்பதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், எங்கள் பகுதிகளுக்கு அரசு அதிகாரிகள் யாரும் வந்து உதவவில்லை என்று குற்றம் சாட்டினர். மேலும் பொதுமக்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருக்கும் சிற்றோடையை விரைவில் தூர்வார வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.


Next Story