ஈரோட்டில் ஆசிரியர்கள்–அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின
ஈரோட்டில் ஆசிரியர்கள்–அரசு ஊழியர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின. பள்ளிக்கூடங்களில் மாணவர் வருகை குறைந்தது.
ஈரோடு,
தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அமலில் இருக்கும் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 7–வது ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும். இடைக்கால நிவாரணம் 20 சதவீதம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு மற்றும் அரசு ஊழியர்கள் சம்மேளனம் ஆகியவை இணைந்த ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் கடந்த 7–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் வேலை நிறுத்த போராட்டத்துடன் மறியல் போராட்டத்திலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் மாநிலம் முழுவதும் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். 2–வது நாளான நேற்றும் சாலை மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று போராட்டக்குழுவினர் ஈரோடு சம்பத்நகர் கொங்கு கலையரங்கம் முன்பு கூடினார்கள். ஈரோடு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், ஊரக வளர்ச்சி பணியாளர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், பணியாளர்கள் என்று ஆயிரக்கணக்கானவர்கள் வந்து கூடினார்கள். கொங்கு கலையரங்கம் முன்பிருந்து, கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்று அங்கு சாலை மறியல் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. இதில் கைதாகி சிறைநிரப்பும் போராட்டமாக மாற்றவும் போராட்டக்குழுவினர் திட்டமிட்டனர்.
ஆனால் ஊர்வலம், மறியல் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. மேலும், வேலை நிறுத்த போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு வெளியிட்டு உள்ள உத்தரவையும் போலீசார் எடுத்துக்கூறினார்கள்.
அதைத்தொடர்ந்து கோர்ட்டு உத்தரவை மதித்து, மறியல் போராட்டத்தை கைவிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று போராட்டக்குழுவினர் முடிவு செய்தனர். இந்த முடிவுக்கு போலீசார் அனுமதி அளித்தனர். அதைத்தொடர்ந்து அங்கேயே ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில தலைவர் ஆனந்த கணேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் யு.கே.சண்முகம், மாவட்ட தலைவர் பெலிக்ஸ் ஸ்டீபன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கர்பாபு, ஜாக்டோ–ஜியோ மாநிலக்குழு உறுப்பினர் தங்கராஜ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் மாவட்ட செயலாளர் முத்துராமசாமி, தமிழ்நாடு வருவாய்த்துறை அதிகாரிகள் சங்க நிர்வாகி குமரேசன் உள்பட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க முன்னாள் மாநில தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு வணிகவரித்துறை பணியாளர்கள் சங்க முன்னாள் மாநில நிர்வாகி மணிபாரதி ஆகியோர் சிறப்புரையாற்றி பேசினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்கள், செவிலியர்கள், வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர்கள் என்று அனைத்து துறை சார்ந்த பணியாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி அனைவரும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் சம்பத் நகர் ரோட்டில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பேசிய அனைவரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை முக்கிய கோரிக்கையாக முன்வைத்து வைத்து பேசினார்கள்.
இதுகுறித்து ஆசிரியர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்பது எங்கள் உரிமை. தற்போது செயல்பாட்டில் உள்ள புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் கடந்த 2004–ம் ஆண்டில் இருந்து பணியில் சேர்ந்தவர்களுக்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எங்களுடைய மாதாந்திர சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்துக்காக பிடித்தம் செய்யப்படுகிறது. இது மாதம் தோறும் பிடித்தம் செய்கிறார்கள். ஆனால் அதன் மூலம் எந்த ஒரு பயனும் இல்லை. இந்த திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இதுவரை ஓய்வூதியம் கிடைக்கவில்லை. ஓய்வின்போது வழங்கப்படும் பணப்பலன்களும் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி அந்த தொகை எந்த வகையில் அரசுக்கு செலுத்தப்படுகிறது என்பதும் தெரியவில்லை. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்துக்கு நாங்கள் பணம் செலுத்தி இருக்கிறோம். எங்கள் பணம் என்ன ஆனது என்று கேட்பதும், எங்கள் ஓய்வு காலத்தில் எங்களுக்கு பணப்பாதுகாப்பு வேண்டும் என்று நாங்கள் நினைப்பதும் எங்கள் உரிமை. அந்த உரிமையை காக்கவே போராடுகிறோம். எனவே எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை உரிமை போராட்டம் தொடரும்’’ என்றார். சுமார் 2 மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடந்தது.
போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜயன், சேகர், முருகன், கோபிநாத், முருகையன், ராஜகுமார், சரவணன் ஆகியோர் தலைமையில் சம்பத் நகர், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
போராட்டக்குழுவினர் கூறும்போது, ‘வருகிற 10–ந் தேதி (நாளை) சென்னையில் ஜாக்டோ–ஜியோ உயர்மட்டக்குழு ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் போராட்டத்தின் அடுத்தகட்ட வடிவம் குறித்து முடிவு செய்யப்படும். வேலை நிறுத்தம் 11–ந் தேதி (திங்கட்கிழமை)யும் தொடரும்’ என்றார்கள்.
வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நேற்று ஈரோட்டில் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள், பணியாளர்கள் மிகக்குறைந்த அளவிலேயே இருந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் பெரும்பாலும் வெறிச்சோடி கிடந்தன. சில அலுவலகங்கள் முற்றிலும் செயல்படவில்லை. ஈரோடு தாலுகா அலுவலகம் இழுத்து மூடப்பட்டு இருந்தது. பணியாளர்கள், அதிகாரிகள் யாரும் வரவில்லை. ஒரு சில அலுவலகங்களில் மட்டும் தற்காலிக பணியாளர்கள், உயர் அதிகாரிகள் பணியில் இருந்தனர்.
இதுபோல் பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் குறைந்த அளவு ஆசிரியர்களே பணிக்கு வந்திருந்தனர். தொடர் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட காரணத்தால் பல அரசு பள்ளிக்கூடங்களில் மாணவ–மாணவிகள் குறைந்த அளவிலேயே வந்திருந்தனர். ஒட்டுமொத்தமாக அனைத்து ஆசிரியர்களும் வேலை நிறுத்தம் செய்த பள்ளிக்கூடங்களில் நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் இருந்து ஆசிரிய–ஆசிரியைகளை நியமித்து இருந்தனர். ஆனால் ஆசிரியர் பற்றாக்குறையால் பாடங்கள் எதுவும் நடைபெறவில்லை. முதல் பருவ மற்றும் காலாண்டு தேர்வுகள் தொடங்கும் நேரத்தில் வேலை நிறுத்த போராட்டம் மாணவ–மாணவிகளை பெரிதும் பாதிக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
இதுபற்றி ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூறும்போது, ‘‘ஈரோடு மாவட்டத்தில் 65 சதவீதம் ஆசிரிய–ஆசிரியைகள் பணிக்கு வந்திருந்தனர். மாணவ–மாணவிகளின் வருகையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை’’ என்றார்.