சென்னிமலை அருகே பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியல்


சென்னிமலை அருகே பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 Sept 2017 4:15 AM IST (Updated: 8 Sept 2017 10:51 PM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை அருகே குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னிமலை,

சென்னிமலை அருகே பசுவட்டி ஊராட்சிக்கு உட்பட்டது வாய்க்கால்புதூர். இங்கு சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் அப்பகுதியிலேயே அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டது.

வறட்சி காரணமாக கடந்த 6 மாதங்களாக ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வற்றியது. காவிரி குடிநீரும் சரியாக கிடைக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்து வந்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்காததால் கடந்த மாதம் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை ஆகியவற்றை நடத்தினார்கள். அப்போது லாரி மூலம் வாய்க்கால்புதூர் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர். ஆனால் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் வாய்க்கால்புதூரில் உள்ள சென்னிமலை–காங்கயம் ரோட்டில் காலிக்குடங்களுடன் அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை மாற்று பாதையில் திருப்பி விட்டனர். பிறகு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது போலீசாரிடம் பொதுமக்கள் கூறும்போது, ‘எங்கள் பகுதிக்கு காவிரி குடிநீர் வினியோகம் செய்ய 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து தோப்புக்காடு, அத்திக்காடு, சென்னிமலைபாளையம் உட்பட பல பகுதிக்கும் தண்ணீர் வினியோகம் செய்வதால் அனைவருக்குமே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண புதிதாக 2 இடங்களில் ஆழ்குழாய் கிணறு அமைக்க மாவட்ட கலெக்டர் நிதி ரூ.3½ லட்சம், சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூ.2 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிதியின் மூலம் இதுவரை எந்த பணியும் தொடங்கவில்லை‘ என்றனர்.

உள்ளாட்சி துறை அலுவலர்கள் தொடர் போராட்டத்தில் இருப்பதால், சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதால் யாரும் வரவில்லை. அதைத்தொடர்ந்து போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசுவதாக உறுதியளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் காலை 10½ மணி அளவில் சாலைமறியலை கை விட்டனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் சென்னிமலை–காங்கயம் ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story