நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயிலை மறித்து வக்கீல்கள் போராட்டம்


நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரெயிலை மறித்து வக்கீல்கள் போராட்டம்
x
தினத்தந்தி 9 Sept 2017 4:30 AM IST (Updated: 8 Sept 2017 11:14 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் ரெயிலை மறித்து வக்கீல்கள் போராட்டம் நடத்தினார்கள்.

கோவை,

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், வக்கீல்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

கோவையில் வக்கீல்கள் நேற்று முன்தினம் கோர்ட்டுகளை புறக்கணித்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள். நேற்று 2–வது நாளாக கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரெயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வக்கீல்கள் சங்க தலைவர் தண்டபாணி தலைமையில் ஏராளமான வக்கீல்கள் கோர்ட்டில் இருந்து ரெயில்நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அவர்களை ரெயில் நிலைய வாசலில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

அப்போது போலீசார் இரும்புத்தடுப்புகளை வைத்து ரெயில்நிலையத்துக்குள் செல்லவிடாமல் தடுத்தனர். வக்கீல்கள் தடுப்புகளை தள்ளிக்கொண்டு 3–வது பிளாட்பாரத்தை நோக்கி வேகமாக சென்றனர். அவர்கள், நீட் தேர்வுக்கு எதிராகவும், மாணவி அனிதா சாவுக்கு நீதி கேட்டும் கோ‌ஷங்களை எழுப்பினார்கள். பகல் 12 மணியளவில் கேரள மாநிலம் ஆலப்புழையில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் நகரை நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் கோவை ரெயில் நிலையத்தின் 3–வது பிளாட்பாரத்துக்கு வந்தது.

வக்கீல்கள் போராட்டம் குறித்து முன்கூட்டியே ரெயில் என்ஜின் டிரைவருக்கு போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே ரெயிலை என்ஜின் டிரைவர் மெதுவாக ஓட்டி வந்தார். ரெயில் நிலையத் துக்குள் ரெயில் வந்ததும், வக்கீல்கள் மறித்து கோ‌ஷம் எழுப்பினார்கள். ரெயில் என்ஜின் மீது ஏறி நின்றும் மத்திய அரசை கண்டித்தும் குரல் எழுப்பினார்கள்.

இந்த போராட்டம் குறித்து வக்கீல்கள் சங்க தலைவர் தண்டபாணி கூறும்போது, ‘நீட் தேர்வுக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய, மாநில அரசுகள் தமிழக மாணவர்களை ஏமாற்றி விட்டன. எனவே வக்கீல்கள் உள்பட அனைத்து தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அடுத்த கட்ட போராட்டம் குறித்து வக்கீல்கள் சங்க நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

மறியல் போராட்டத்தில் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் விசுவநாதன், யுவராஜ், முன்னாள் தலைவர் நந்தகுமார், பன்னீர்செல்வம், வெண்மணி உள்பட பலர் கலந்துகொண்டனர். ரெயிலை மறித்த பின்னர் ரெயில்நிலையத்தைவிட்டு வெளியே வந்த வக்கீல்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி ஒரு மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

வக்கீல்கள் போராட்டத்தின் காரணமாக ஆலப்புழை–தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் 20 நிமிடம் தாமதமாக கோவை ரெயில் நிலையத்தில் இருந்து பகல் 12.20 மணிக்கு புறப்பட்டு சென்றது.


Next Story