ஜி.எஸ்.டி. வரியை குறைக்கக் கோரி பம்ப்செட், உதிரிபாகம் தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம்–ஆர்ப்பாட்டம்


ஜி.எஸ்.டி. வரியை குறைக்கக் கோரி பம்ப்செட், உதிரிபாகம் தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம்–ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Sept 2017 4:45 AM IST (Updated: 8 Sept 2017 11:15 PM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி. வரியை குறைக்கக் கோரி பம்ப்செட் மற்றும் உதிரிபாகம் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதனால் 3 ஆயிரம் சிறு, குறு தொழிற்கூடங்கள் மூடப்பட்டன.

கோவை,

ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டதால், கடந்த ஜூலை 1–ந் தேதி முதல் பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்களை தயார் செய்யும் சிறு, குறு தொழிற்கூடங்கள் மீது 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண் டும் என்று கோரி கோவை மாவட்ட பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் (கோப்மா) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் டாடாபாத்தில் நேற்றுக்காலை நடைபெற்றது. இதற்கு கோப்மா தலைவர் மணிராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:–

கடந்த ஜூலை 1–ந் தேதி முதல் மத்திய அரசு குறுந்தொழில் மீது விதித்த 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி காரணமாக சிறு குறு தொழில்கள் குறிப்பாக சிறு, குறு பம்ப்செட் உற்பத்தி, போர்வெல் டேங்க் கம்பிரசர்கள், உதிரி பாகங்கள், ஜாப் ஒர்க் தொழில் என்று அனைத்து வகை குறுந்தொழில்களின் வளர்ச்சியும் சரிவடைய தொடங்கி விட்டது.

வேலைவாய்ப்பு குறைந்த காரணத்தினால் குறுந்தொழில் கூடங்களில் பணியாற்றும் தொழிலாளர்க ளுக்கு கடும் வேலை இழப்பு, வாரத்தில் 2 நாட்கள் வேலை இழப்பு மற்றும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு அதிகப்படியான ஜி.எஸ்.டி. வரியை செலுத்த முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது. நாங்கள் ஜி.எஸ்.டி. வரியை எதிர்க்கவில்லை.

குறைந்த முதலீட்டில் அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் குறுந்தொழில்கள் மீது அதிகபட்சம் 5 சதவீதம் மட்டுமே வரி விதிக்க வேண்டும். ஏற்கனவே இருந்த 1½ கோடி ரூபாய் கலால் வரி விலக்கினை ஜி.எஸ்.டி. வரி சட்டத்திலும் தொடர வேண்டும்.

கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் 3 ஆயிரம் சிறு, குறு தொழிற்கூடங்கள் ஒருநாள் மூடப்பட்டுள்ளன. இது தவிர மோட்டார் பம்புகளை விற்கும் 500–க்கும் மேற்பட்ட கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சிறு, குறு தொழிற் கூடங்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.70 கோடி உற்பத்தி இழப்பும், அரசுக்கு ரூ.12 கோடி வரி வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. எனவே குறுந்தொழில்களையும் அதை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் காப்பாற்ற உடனடியாக ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. நா.கார்த்திக் கலந்து கொண்டு பேசுகையில், ‘பம்ப்செட், உதிரிபாகங்கள் தயாரிக்கும் சிறு, குறு தொழிற்கூடங்களுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதமாக குறைக்கும் வரை போராட்டம் தொடரும்’ என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் சங்க துணைத்தலைவர் பழனிசாமி, துணைச் செயலாளர் பேச்சிமுத்து மற்றும் நிர்வாகிகள் வடிவேல், கனகவேல், காளிஸ்வரன் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் நேற்று வேலைநிறுத்தம் செய்தனர். இதன் காரணமாக கோவை ஆவாரம்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம், பீளமேடு, சிங்காநல்லூர், கணபதி ஆகிய பகுதிகளில் உள்ள 3 ஆயிரம் சிறு, குறு தொழிற்கூடங்கள் நேற்று ஒருநாள் மூடப்பட்டன.


Next Story