மு.க.ஸ்டாலின், வீரமணி உருவபொம்மை எரிப்பு புதியதமிழகம் கட்சியினர் போராட்டம்


மு.க.ஸ்டாலின், வீரமணி உருவபொம்மை எரிப்பு புதியதமிழகம் கட்சியினர் போராட்டம்
x
தினத்தந்தி 9 Sept 2017 4:45 AM IST (Updated: 9 Sept 2017 12:42 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் மற்றும் வீரமணியின் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்திய புதிய தமிழகம் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

ராஜபாளையம்,

நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. மற்றும் திராவிடர் கழகத்தின் செயல்பாட்டை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்து இருந்தார். மேலும் அரியலூர் மாணவி அனிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் தி.மு.க. மற்றும் திராவிடர் கழகத்துக்கு எதிராக ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சியினர் திரண்டனர். கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜாலிங்கம் தலைமையில் ராஜபாளையம் காந்திசிலை ரவுண்டானா அருகே தி.மு.க.செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் வீரமணி ஆகியோரின் உருவ பொம்மையினை கொளுத்த முயன்றனர். போலீசார் அதனை தடுக்க முயற்சித்தார்கள். அப்போது போலீசாருக்கும் போராட்டக்குழுவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரின் எதிர்ப்பையும் மீறி உருவபொம்மைகள் கொளுத்தப்பட்டன. அப்போது மு.க.ஸ்டாலின், வீரமணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி ஆகியோருக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

இதனை தொடர்ந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 50 பேரை போலீசார் கைது செய்தார்கள். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதேபோல சாத்தூர் பஸ் நிலையம் அருகே நேற்று காலை புதிய தமிழகம் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் முனியாண்டி, கருப்பசாமி தலைமையில் அந்த கட்சியினர் திடீரென்று திரண்டனர். அவர்கள் மு.க.ஸ்டாலின் உருவபொம்மையை கொளுத்தி கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அனைவரும் கலைந்து சென்று விட்டனர். இதுதொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.


Next Story