குரோம்பேட்டையில் 8 மாடி கட்டிடத்துக்கு ‘சீல்’ சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை
குரோம்பேட்டையில் முறையான அனுமதி இன்றி கட்டப்பட்ட 8 மாடி வணிக கட்டிடத்துக்கு சென்னை பெருநகர வளாச்சி குழும அமலாக்க பிரிவு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தனியார் இடத்தில் கடந்த சில மாதங்களாக பிரமாண்டமாக அடித்தளத்துடன, தரைதளம் மற்றும் 8 மாடிகள் கொண்ட கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. பிரபல துணிக்கடை இந்த வணிக கட்டிடத்தில் வர உள்ளதாக கூறப்பட்டு வந்தது.
கடந்த மாதம் 3–ந் தேதி சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள், அந்த கட்டிடம் கட்டும் இடத்தில் சோதனை செய்தனர். அப்போது அனுமதி பெறாமல் அந்த கட்டிடம் கட்டுவது தெரிந்தது.
இதையடுத்து கட்டிடம் கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என கட்டிட உரிமையாளருக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமலாக்க பிரிவு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.
அதற்கு கட்டிட உரிமையாளர் பதில் அனுப்பியதில், அனுமதி பெற்ற பிறகே கட்டிடம் கட்டும் பணிகளை செய்வதாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் கடந்த மாதம் 21–ந் தேதி அதிகாரிகள் அங்கு சோதனை செய்தனர். அப்போது 4 மாடிகள் கட்டப்பட்டு 5–வது மாடி கட்டும் பணி நடைபெற்று வந்தது தெரிந்தது. முறையான அனுமதி பெற்ற பிறகு கட்டிடம் கட்டும் பணியை மேற்கொள்வதாக கூறி விட்டு கட்டுமான பணியை நிறுத்தாமல் தொடர்ந்து செய்து வந்தது தெரிந்தது.
கடந்த 6 மற்றும் 7–ந் தேதிகளில் அதிகாரிகள் மீண்டும் சோதனை செய்த போது 8 மாடிகள் கட்டப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமலாக்க பிரிவு அதிகாரிகள் நேற்று காலை 20–க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர்.
அனுமதி இல்லாமல் கட்டிட பணிகள் செய்யக்கூடாது என முறையாக நோட்டீஸ் வழங்கிய பிறகும் அதை செயல்படுத்தாமல் தொடர்ந்து கட்டிட பணிகள் செய்து 8 மாடிகள் கட்டியது தெரிய வந்ததால் அந்த கட்டிடத்துக்கு ‘சீல்’ வைத்தனர். அங்கு எந்த பணிகளும் நடைபெறக்கூடாது என அறிவிப்பு செய்து நோட்டீசும் ஒட்டினர்.