மதுரையில் 2–வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்
மதுரையில் நேற்று 2–வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர் கூட்டமைப்பினர் (ஜாக்டோ–ஜியோ) நேற்று முன் தினம் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். மேலும் ஆங்காங்கே சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
மதுரையிலும் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஊரக வளர்ச்சி துறை அலுவலகம் முன்பு திரண்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊர்வலமாக சென்று திருவள்ளுவர் சிலை முன்பு உள்ள பிரதான சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 230 பெண்கள் உள்பட 703 பேரை கைது செய்தனர். இதுபோல், ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டமும் நடந்தது.
இந்த நிலையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்துக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை இடைக்காலத் தடை விதித்தது. ஆனாலும் நேற்று 2–வது நாளாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜாக்டோ– ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் முருகன், சந்திரன், சுப்பையன், நாகராஜன், பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.