கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Sept 2017 4:15 AM IST (Updated: 9 Sept 2017 3:28 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து 8-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்தவேண்டும். அதுவரை 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும். சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியம் முறைகளை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிடவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர்- அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைகுழுவான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்தனர். அதன்படி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று முன்தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று 2-வது நாளாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கரூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் வேலுமணி தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மகாவிஷ்ணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

இதில் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணை தலைவர் திருநாவுக்கரசு, உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் மகேஸ்வரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல், கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில செயலாளர் ஜெயராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் 3 பேர் அரை நிர்வாணத்துடன் உடலில் நாமம் வரைந்த நிலையில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story