சிறுமியை கற்பழித்து சித்ரவதை செய்த 2 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை
சிறுமியை கற்பழித்து சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்த 2 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தானே செசன்சு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
தானே,
தானே மாவட்டம் சீல்டைகர் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1–ந்தேதி வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த 3 பேர் சாக்லேட் வாங்கித்தருவதாக கூறி, சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்துச்சென்று மிரட்டி கற்பழித்தனர். மேலும் சிகரெட்டால் சிறுமியின் உடலில் சூடு வைத்து சித்ரவதை செய்தனர்.இதில் காயமடைந்த சிறுமி அலறித்துடித்ததை அடுத்து சிறுமியை அங்கேயே விட்டு விட்டு தப்பிச்சென்றனர்.
இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், சிறுமியை கற்பழித்தது அதே பகுதியை சேர்ந்த சலீம் அன்சாரி, சோனு முரப், இசாக் அன்சாரி ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. இந்தநிலையில் போலீசார் தேடுவதை அறிந்த 3 பேரும் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு தப்பிச்சென்றனர். இது குறித்து அறிந்த தானே போலீசார் அங்கு சென்று உள்ளூர் போலீசார் உதவியுடன் 3 பேரை பிடிக்க முயன்றனர்.அப்போது இசாக் அன்சாரி போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். மற்ற 2 பேரையும் போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் மீது தானே செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்
இந்த வழக்கு விசாரணையின் போது 11 பேர் இருவருக்கும் எதிராக சாட்சியம் அளித்தனர். இந்தநிலையில் வழக்கின் விசாரணை நிறைவடைந்து, நேற்று நீதிபதி ஏ.எஸ் பாய்சாரே தீர்ப்பு வழங்கினார்.அப்போது 2 பேர் மீதான குற்றம் ஆதாரங்களுடன் நிரூபணமானதால் சலீம் அன்சாரி, சோனு முரப் ஆகியோருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள இசாக் அன்சாரியை விரைவில் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story