போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலை விவகாரத்தில் பா.ஜனதாவினர் அரசியல் செய்கிறார்கள்


போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலை விவகாரத்தில் பா.ஜனதாவினர் அரசியல் செய்கிறார்கள்
x
தினத்தந்தி 9 Sept 2017 4:51 AM IST (Updated: 9 Sept 2017 4:50 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலை விவகாரத்தில் பா.ஜனதாவினர் அரசியல் செய்வதாக மந்திரி கே.ஜே.ஜார்ஜ் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு,

துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்த கணபதி கடந்த ஆண்டு(2016) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு அப்போது போலீஸ் மந்திரியாக இருந்த கே.ஜே.ஜார்ஜ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் பிரணாப் மொகந்தி, ஏ.எம். பிரசாத் ஆகியோர்தான் காரணம் என்று கூறப்பட்டது. இதுகுறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, கணபதி தற்கொலைக்கு மந்திரி கே.ஜே.ஜார்ஜ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் பிரணாப் மொகந்தி, ஏ.எம். பிரசாத் ஆகியோர் காரணம் அல்ல என்று கூறி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார்கள்.

இதற்கிடையில், கணபதி தற்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த கடந்த 5–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் கே.ஜே.ஜார்ஜ் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதுகுறித்து பெங்களூருவில் நேற்று மந்திரி கே.ஜே.ஜார்ஜிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:–

போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலை விவகாரத்தில் பா.ஜனதா கட்சியினருக்கு அரசியல் செய்வதை தவிர வேறு வேலையே இல்லை. கணபதி சாவில் உள்ள உண்மை வெளியே வரவேண்டும் என்ற எண்ணம் பா.ஜனதாவினருக்கு இல்லை. இதுபோல ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி தற்கொலையிலும் எனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பா.ஜனதாவினர் கூறினார்கள்.

பின்னர் சி.பி.ஐ. நடத்திய விசாரணையில், டி.கே.ரவி சொந்த காரணங்களுக்காக தற்கொலை செய்துள்ளதாகவும், அவரது சாவுக்கு நான் காரணம் அல்ல என்றும் தெரியவந்தது. தற்போது போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலை விவகாரத்திலும் பா.ஜனதாவினர் அரசியல் செய்கிறார்கள். ஒருவரின் சாவில் அரசியல் செய்வதே பா.ஜனதாவினரின் வேலையாக உள்ளது.

கணபதி சாவு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். விசாரணை முடிந்து உண்மை வெளியே வரட்டும். இந்த விவகாரத்தில் எனது மந்திரி பதவியை ராஜினாமா செய்யும்படி கூறுவதற்கு பா.ஜனதாவினருக்கு எந்த தகுதியும் இல்லை. முதல்–மந்திரி சித்தராமையா கூறினால், இப்போதே எனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன்.

அடுத்த ஆண்டு (2018) நடைபெறும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதி. சித்தராமையா மீண்டும் முதல்–மந்திரி ஆவார். பா.ஜனதாவினர், ஆட்சியை பிடித்து விடலாம் என்று கனவு காண்கிறார்கள். அவர்களது கனவு பலிக்காது.

இவ்வாறு மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.


Next Story