கடையம் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கடையம் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கடையம்,
கடையம் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
குடிநீர் இணைப்புநெல்லை மாவட்டம் கடையம் அருகே பொட்டல்புதூர் பஞ்சாயத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த 2015–16ம் ஆண்டு பொட்டல்புதூர் பஞ்சாயத்தில் 315 குடிநீர் இணைப்பு வழங்க கலெக்டர் உத்தரவிட்டார். இதனை மீறி சுமார் 800–க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் வழங்க பொதுமக்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ரசீது வழங்காமல் இணைப்புகள் கொடுக்கப்பட்டன.
தற்போது நிலவும் வறட்சியால் குடிநீர் வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை துண்டிக்க இருப்பதாக அறிவிப்பு செய்தார். இதையடுத்து பணம் கொடுத்து ரசீது பெறாமல் இணைப்பு பெற்றவர்கள் தாங்கள் ஓராண்டிற்கு முன்பே பணம் கட்டியுள்ளதாகவும், உரிய ரசீது தராமல் இதுவரை இழுத்தடித்துள்ளதாகவும், எனவே தங்களது இணைப்புகளைத் துண்டிக்கக் கூடாது. மேலும் ரசீது தராமல் இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டனர்.
கோர்ட்டு உத்தரவுஇதற்கிடையே பொட்டல்புதூரைச் சேர்ந்த சிலர் இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து அனுமதியின்றி கொடுக்கப்பட்ட இணைப்புகளை அகற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு கடந்த 5–ந் தேதி உத்தரவிட்டுள்ளது. உத்தரவின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் அனுமதி பெறாத அனைத்து வீடுகளுக்கும் தாங்களாகவே இணைப்பை அகற்ற வலியுறுத்தி ஆணை வழங்கினார். இந்த ஆணையில் வருகிற 12–ந் தேதிக்குள் அவரவர் வீட்டில் முறைகேடாக வைத்துள்ள குடிநீர் இணைப்பை தாங்களே முன் வந்து துண்டிக்க வேண்டும். இல்லையென்றால் 13–ந் தேதி காலை 10 மணிக்கு அதிகாரிகள் மூலம் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.
முற்றுகைஇந்த நிலையில் பணம் செலுத்திய பொதுமக்கள் 100–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை பொட்டல்புதூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டின் முன் திரண்டு முற்றுகையிட்டு ரசீது வழங்க கோரி கோஷமிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆழ்வார்குறிச்சி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் துரைசாமி, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் முகமது இப்ராஹிம் ஆகியோர் பொதுமக்களிடம் முற்றுகையிடுவதற்கு அனுமதி கிடையாது. இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளியுங்கள் என்று கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.