சிதம்பரம் மருத்துவ கல்லூரியில் கொட்டும் மழையில் மாணவர்கள் போராட்டம்


சிதம்பரம் மருத்துவ கல்லூரியில் கொட்டும் மழையில் மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 10 Sept 2017 4:45 AM IST (Updated: 10 Sept 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மாணவர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கக்கோரி நேற்று கொட்டுமழையில் போராட்டம் நடத்தினர்.

சிதம்பரம்,

சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு மருத்துவம், பல் மருத்துவம் படிக்கும் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவம், பல் மருத்துவத்தில் படிக்கும் மாணவர்கள் கடந்த 30-ந்தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போராட்டம் தீவிரமடைவதை உணர்ந்த பல்கலைக்கழகம் மருத்துவ கல்லூரியில் இளநிலை பிரிவில் எம்.பி.பி.எஸ். படிக்கும் (முதலாம் ஆண்டு தவிர்த்து) மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து முதுநிலை பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கும் காலமுறையற்ற விடுமுறை விடப்பட்டது. மேலும் மாணவர்களை விடுதிகளில் இருந்து காலி செய்யும் படியும் வலியுறுத்தியது. ஆனால் மாணவ- மாணவிகள் விடுதிகளை காலி செய்யாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் போராட்டம் நேற்று 11-வது நாளாக நீடித்தது. இதில் மருத்துவ கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் தங்களது விடுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மருத்துவ கல்லூரி வளாகத்துக்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து , அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்ததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அப்போது திடீரென மழை பெய்தது. இருப்பினும் மாணவர்கள் கலைந்து செல்லாமல் கொட்டும் மழையையும் பொருட்படுத் தாமல் கையில் குடைபிடித்தப்படி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடமாட்டோம் என தெரிவித்தனர். மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story