கோத்தகிரி அருகே கேத்தரின் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த வாலிபர் தவறி விழுந்து சாவு


கோத்தகிரி அருகே கேத்தரின் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த வாலிபர் தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 9 Sep 2017 11:15 PM GMT (Updated: 9 Sep 2017 7:39 PM GMT)

கோத்தகிரி அருகே உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த வாலிபர் தவறி விழுந்து இறந்தார்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அரவேனு பகுதியில் உள்ளது கேத்தரின் நீர்வீழ்ச்சி. சுற்றுலா தலமான இங்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் நேற்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் ரஞ்சித் குமார் (வயது 22), தனது நண்பர்கள் 4 பேருடன் கேத்தரின் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா வந்தார்.

நேற்று மாலை 3 மணி அளவில் நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் தண்ணீர் தேங்கி நிற்கும் தடாகம் அருகில் நின்று ரஞ்சித்குமார் செல்போனில் ‘செல்பி’ எடுக்க முயன்றார். அப்போது அவர் நிலைதடுமாறி தடாகத்தில் தவறி விழுந்தார். கடந்த சில நாட்களாக கோத்தகிரி பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் அங்கு தண்ணீர் அளவில் ஓடிக்கொண்டிருந்தது. தவறி விழுந்த அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

ரஞ்சித் குமார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை பார்த்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் ரஞ்சித் குமார் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் சுமார் 3 மணி நேரம் போராடியும் ரஞ்சித்குமாரின் உடலை மீட்க முடியவில்லை. தண்ணீரின் அதிகளவில் கரைபுரண்டு ஓடியதாலும், இருள் சூழ்ந்து இருந்ததாலும் மீட்பு பணியை தொடர முடியவில்லை. எனவே உடலை தேடும் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது. சுற்றுலா வந்த இடத்தில் ‘செல்பி’ மோகத்தால் நண்பரை பறிகொடுத்த சக நண்பர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

கேத்தரின் நீர்வீழ்ச்சியில் சுமார் 200 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் விழுகிறது. அந்த தண்ணீர் அங்குள்ள சிறிய தடாகங்களில் தேங்கி நிற்கும். இந்த தடாகம் ஆழம் மிகுந்ததாக இருக்கும். இதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வார்கள். ரம்யமான இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியில் ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த விபரீதத்தை யாரும் அறிவது இல்லை.

நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியின் அழகை ரசித்தபடி ‘செல்பி’ எடுக்கிறார்கள். இதில் நிலைதடுமாறி அவர்கள் தங்கள் உயிரை இழந்துவிடுகிறார்கள். இப்படி கடந்த 6 மாதத்தில் மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆபத்தை தடுக்க சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனிவரும் நாட்களில் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். மேலும், சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் இருக்கும் நேரத்தில் கண்காணிப்பு பணியிலும் அதிகாரிகள் ஈடுபட வேண்டும்.


Related Tags :
Next Story