பலத்த மழை எதிரொலி: வராகநதியில் நீர்வரத்து அதிகரிப்பு
தேனி மாவட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக பெரியகுளம் அருகே உள்ள வராகநதிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பெரியகுளம்,
பெரியகுளம் நகரின் மையப்பகுதி வழியே வராகநதி செல்கிறது. இந்த நதியின் தெற்கு பகுதி தென்கரை என்றும், வடக்கு பகுதி வடகரை என்றும் அழைக்கப்படுகிறது. நகர்ப்பகுதியில் உள்ள வீடுகள், வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் வராகநதியில் தான் கலக்கிறது. இது தவிர குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளும் நதியில் வீசப்படுகின்றன. இதன் காரணமாக வராகநதி பகுதியில் துர்நாற்றம் வீசி வந்தது.
மேலும் கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்ததால் அப்பகுதி மக்கள் பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாகி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பெரியகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வராகநதியில் நீர்வரத்து அதிகரித்தது.
இதன் காரணமாக வராகநதியில் கொட்டப்பட்ட குப்பைகள், இறைச்சி கழிவுகள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டன. இதனால் தற்போது நதி சுத்தமாக உள்ளது. அப்பகுதியில் துர்நாற்றமும் வீசவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக கூவம் நதி போல் காட்சியளித்த வராகநதி இயற்கையின் கருணையால் சுத்தமாகி உள்ளது.
இனிவரும் காலங்களில் நதி மாசடையாமலும், கழிவுநீர் கலக்காமலும் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் பகுதி மக்களின் கோரிக்கையாகும் என்றனர்.