அங்கீகாரம், சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பு: மாவட்ட தலைநகரங்களில் 20–ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு


அங்கீகாரம், சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பு: மாவட்ட தலைநகரங்களில் 20–ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
x
தினத்தந்தி 10 Sept 2017 4:30 AM IST (Updated: 10 Sept 2017 1:10 AM IST)
t-max-icont-min-icon

அங்கீகாரம், சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதால், மாவட்ட தலைநகரங்களில் வருகிற 20–ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை,

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுச்செயலாளர் ஜி.கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வரவேற்றார். மாவட்ட தலைவர் சாவித்ரி ராமகிருஷ்ணன், பொருளாளர் பிரேமா சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:–

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சுயநிதி பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தலுக்கு விண் ணப்பித்த 3 மாத காலத்திற்குள் அனுமதி வழங்காமல் பள்ளி நிர்வாகிகளை அலைக்கழிப்பது கண்டனத்திற்குரியது. மேலும், சுயநிதி பள்ளிகள் அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவதை போன்ற தோற்றத்தை அதிகாரிகள் உருவாக்கி வருகிறார்கள்.

சுயநிதி பள்ளிகளுக்கு புதுப்பித்தல் கோரி விண்ணப்பிக்க தீயணைப்புத்துறை, சுகாதாரத் துறை சான்றிதழ் அவசியமாகிறது. ஆனால் அந்த துறைகளில் சான்றிதழ் பெறுவதற்கான கோப்புகள் கிடப்பில் போட்டு வைத்து, தாளாளர்களை இழுத்தடிப்பது வாடிக்கையாகி விட்டது.

இந்த பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 20–ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது. சுயநிதி பள்ளிகளில் ஆய்வு என்ற பெயரில், பள்ளி நிர்வாகிகள் மிரட்டப்படுவது அதிகரித்து வருகிறது. அதை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15–ந் தேதி அப்துல்கலாம் பிறந்தநாள், மாணவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டும் விழாவை அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக கொண் டாடுவது என தீர்மானிக்கப்படுகிறது. போட்டி தேர்வை மனதில் கொண்டு பள்ளி பாடத்திட்டங்களில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு இந்த சங்கம் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story