சமச்சீர் கல்வி கற்ற மாணவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாது தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி


சமச்சீர் கல்வி கற்ற மாணவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாது தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டி
x
தினத்தந்தி 9 Sep 2017 11:45 PM GMT (Updated: 9 Sep 2017 7:40 PM GMT)

சமச்சீர் கல்வி கற்ற மாணவர்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் கூறினார்.

பொள்ளாச்சி,

தமிழ்நாடு மாணவர் மன்றம் சார்பில் நீட் தேர்வினால் மருத்துவபடிப்பில் இடம் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் படம்திறப்பு விழா பொள்ளாச்சியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர் தினேஷ் தலைமை தாங்கினார். தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டு அனிதா உருவப்படத்தை திறந்து வைத்து பேசினார்.

முன்னதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழகத்தில் சமூகநீதி கோட்பாடுகளை தகர்த்து எறியும் வகையில், ஏழை, எளிய மாணவ–மாணவிகளின் மருத்துவ படிப்பு கனவை தகர்க்கும் வகையில் மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வந்துள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவி அனிதா அவரது உயிரை தியாகம் செய்துள்ளார். ஆகவே நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். கல்வியை மத்திய பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். இதற்கு மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தெரியாத பாடத்திட்டத்தை கொடுத்தால் எப்படி? எழுத முடியும். 1 முதல் 12–ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை படித்த மாணவ–மாணவிகளால் எப்படி நீட் தேர்வை எதிர்கொள்ளமுடியும். அது முடியாத காரியம். ஆகவே தமிழகத்தை சேர்ந்த ஏழை மாணவர்கள் டாக்டர் ஆக கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்டு உள்ளது நீட் தேர்வு. நீட் தேர்வுக்கு ஆதரவாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தன்னிலை மறந்து பேசி வருகிறார். அவரும், தமிழிசை சவுந்தர்ராஜனும் டாக்டர்கள் தானே. அவர்கள் நீட் தேர்வு எழுதி மதிப்பெண் எடுத்த பிறகு, மக்களுக்கு சிகிச்சை அளிக்கட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story