இளையான்குடி அருகே குடிநீர் கேட்டு கிராமமக்கள் சாலை மறியல்


இளையான்குடி அருகே குடிநீர் கேட்டு கிராமமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Sept 2017 4:30 AM IST (Updated: 10 Sept 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி அருகே குமாரக்குறிச்சி கிராமத்தில் குடிநீர் சீராக வினியோகிக்க கோரி கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளையான்குடி,

இளையான்குடி–பரமக்குடி சாலையில் உள்ளது குமாரக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் எடுப்பதற்காக 2 முதல் 5 கி.மீ. தூரம் சென்று பக்கத்து கிராமத்தில் குடிநீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஒரு குடம் குடிநீர் ரூ.15 வரை விலை கொடுத்து வாங்கி பருகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடிநீர் எடுப்பதற்காக காலை மற்றும் மாலை வேளைகளில் காலிக்குடங்களுடன் திரிவதே இந்த ஊர் மக்களின் முக்கிய வேலையாக இருக்கிறது.

குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் நேற்று இளையான்குடி–பரமக்குடி சாலையில் மறியல் செய்து போராட்டம் நடத்தினர். இதனால் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர், மறியல் குறித்து தகவல் அறிந்த இளையான்குடி தாசில்தார் கண்ணதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் அழகிமீனாள், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கிராமமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

இதுகுறித்து குமாரக்குறிச்சியை சேர்ந்த லதா என்ற பெண் கூறும்போது, கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சி காரணமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் ஊரில் கண்மாய் கரையில் ஆழ்துளை கிணறு அமைத்து மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது என்ன காரணமாக என்று தெரியவில்லை. அதன்மூலமும் தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகிறோம். இதனாலேயே மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுத்தால் ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றார்.


Next Story