பயிர் இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கமுதி தாலுகாவில் பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி கமுதி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கமுதி,
கமுதி தாலுகாவில் பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி கமுதி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சிங்கமுத்து, பொன்னுச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.
முன்னாள் ஊராட்சி தலைவர் கண்ணன், உதயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மயில்வாகனன், மாநில பொருளாளர் முருகேசன், கமுதி தாலுகா செயலாளர் முத்துவிஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி முருகேசன்,தாலுகா குழு முனியசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் கமுதி தாலுகாவில் உள்ள 14 வருவாய் கிராமங்களுக்கும் பயிர் இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட வறட்சி நிவாரண தொகையை விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.