மூலனூர் அருகே நல்லதங்காள் அணையின் நீர்மட்டம் 23 அடியை எட்டியது


மூலனூர் அருகே நல்லதங்காள் அணையின் நீர்மட்டம் 23 அடியை எட்டியது
x
தினத்தந்தி 9 Sep 2017 11:00 PM GMT (Updated: 9 Sep 2017 8:02 PM GMT)

மூலனூர் அருகே நல்லதங்காள் அணையின் நீர்மட்டம் 23 அடியை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மூலனூர்,

மூலனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்னிவாடி ஊராட்சியில் அமைந்துள்ளது நல்லதங்காள் அணை. 30 அடி உயரம் கொண்ட இந்த அணை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த அணையினால் பொன்னிவாடி, நல்லாம்பாளையம், ஆலாம்பாளையம், பெரமியம், தூரம்பாடி, மூலனூர் பகுதிகளுக்கு உட்பட்ட 4,744 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

இந்த அணைக்கு திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதை சுற்றி உள்ள கணக்கம்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, பருத்தியூர், பாப்பாகுளம், ஆயக்குடி, பொருளூர், கொத்தயம் ஆகிய பகுதிகளில் உள்ள சிறு குளங்கள் நிரம்பி தண்ணீர் வந்து சேரும். கடந்த சில நாட்களாக, நல்லதங்காள் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதன்காரணமாக அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் ‘கிடு, கிடு‘ என்று உயர்ந்து 23 அடியை எட்டியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை ஏமாற்றியதால், கவலையில் இருந்த இப்பகுதி விவசாயிகள் இந்த ஆண்டு அணை நிரம்பும் தருவாயில் இருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுபற்றி இப்பகுதி விவசாயி பாலு கூறும்போது, இந்த பகுதி விவசாயிகள் நல்லதங்காள் அணையின் நீர் ஆதாரத்தை பயன்படுத்தி தான் காய்கறிகள், பயறு வகைகள் போன்றவற்றை பயிரிடுவது வழக்கும். கடந்த 2 ஆண்டுகளாக இந்த பகுதியில் மழையில்லாததால், இந்த நல்லதங்காள அணை நீரை நம்பியுள்ள விவசாயிகள் குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு கூட போதிய குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். தற்போது, நல்லதங்காள் அணையின் நிரப்பும் தருவாயில் இருப்பது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்றார்.


Next Story