ஓமலூர் அருகே சிறுசேமிப்பு நிறுவனத்துக்கு பணம் வசூலித்து கொடுத்தவர் தற்கொலை


ஓமலூர் அருகே சிறுசேமிப்பு நிறுவனத்துக்கு பணம் வசூலித்து கொடுத்தவர் தற்கொலை
x
தினத்தந்தி 9 Sep 2017 10:30 PM GMT (Updated: 2017-09-10T03:27:52+05:30)

ஓமலூர் அருகே, சிறுசேமிப்பு நிறுவனத்துக்கு பணம் வசூலித்து கொடுத்தவர் தற்கொலை செய்து கொண்டார்.

ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த சிந்தாமணியூர் குண்டுமணி கரடு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 47). இவருடைய மனைவி தமிழ்செல்வி (32). இவர்களுக்கு மோனிஷா (14), நதியா (10) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

பிரகாஷ் கடந்த 2009–ம் ஆண்டு வரை கைத்தறி நெசவு கூடம் அமைத்து தொழில் செய்து வந்தார். இதன்பின்னர் 2009 முதல் 2014–ம் ஆண்டு வரை பிரகாஷ் மற்றும் அவருடைய அண்ணன் பூபதி ஆகிய 2 பேரும் தனியார் சிறுசேமிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். தர்மபுரியில் இந்த நிறுவனத்துக்கான அலுவலகம் இருந்தது. பிரகாஷூம், பூபதியும் பொதுமக்களிடம் இருந்து சிறுசேமிப்பு பணம் வசூல் செய்து அதை பெருமாள் என்ற முகவர் மூலம் அந்த நிறுவனத்துக்கு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு ரூ.30 லட்சம் வரை வசூல் செய்து கொடுத்து உள்ளனர்.

2014–ம் ஆண்டு முதல் அந்த சிறுசேமிப்பு நிறுவனம், பணத்தை செலுத்திய பொதுமக்களுக்கு திரும்ப தொகையை கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். இதனால் பிரகாஷ் மனம் உடைந்த நிலையில் இருந்தார்.

இந்தநிலையில் பிரகாஷ் நேற்று முன்தினம் இரவு கைத்தறி நெசவு கூடத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பிரகாஷ் மனைவி தமிழ்செல்வி ஓமலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story