போலீஸ் கமிஷனர் வீடு முன்பு விபத்து: தாமதமாக வந்த சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்


போலீஸ் கமிஷனர் வீடு முன்பு விபத்து: தாமதமாக வந்த சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்
x
தினத்தந்தி 9 Sep 2017 10:45 PM GMT (Updated: 9 Sep 2017 10:35 PM GMT)

சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி ஓய்வுபெற்றவர் பழனிசாமி. இவர், தற்போது சேலம் அஸ்தம்பட்டி அடுத்துள்ள பிரகாசம் நகரில் வசித்து வருகிறார்.

சேலம்,

 இவர், நேற்று மாலை 6.30 மணியளவில் ஏற்காடு மெயின்ரோட்டில் போலீஸ் கமிஷனர் வீட்டின் அருகே காரில் வந்தார். அப்போது, ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த மற்றொரு கார் திடீரென நிலைதடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்புசுவர் மீது மோதிவிட்டு, பழனிசாமியின் கார் மீதும் மோதியது. இதில் அவரது கார் லேசாக சேதமானதோடு அவருக்கும் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. ஏற்காட்டில் இருந்து வந்த காரில், ராமநாதபுரத்தை சேர்ந்த காஜா என்பவர் குடும்பத்தினருடன் வந்திருந்தார். ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்றுவிட்டு வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

போலீஸ் கமிஷனரின் குடியிருப்பு முன்பு இந்த விபத்து நடந்ததால் சத்தம் கேட்டு வீட்டில் இருந்து கமிஷனர் சஞ்சய்குமார் ரோட்டிற்கு வந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் அவரே ஈடுபட்டார். சம்பவம் நடந்து சுமார் ½ மணி நேரம் ஆகியும் அஸ்தம்பட்டி போலீசார் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து உடனே ‘மைக்’ மூலம் போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் கமிஷனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் போக்குவரத்து ரோந்து பணியில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் யார்? என்றும், அவரை பற்றி விசாரித்து பதில் தெரிவிக்குமாறும் கூறினார். அதன்படி அதிகாரிகள் விசாரணை செய்ததில், அஸ்தம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி என்பவர் ரோந்து பணியில் இருந்ததும், அவர் விபத்து நடந்த இடத்திற்கு காலதாமதமாக சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை மாநகர ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்து கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவிட்டார்.

Next Story