புதுச்சேரியில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அமைச்சர் கந்தசாமி தொடங்கிவைத்தார்


புதுச்சேரியில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அமைச்சர் கந்தசாமி தொடங்கிவைத்தார்
x
தினத்தந்தி 10 Sept 2017 4:46 AM IST (Updated: 10 Sept 2017 4:46 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தை அமைச்சர் கந்தசாமி தொடங்கிவைத்தார்.

புதுச்சேரி,

குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக கடந்த 2005–ம் ஆண்டு பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் 2007–ம் ஆண்டு டெல்லியில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அதன்பின் மாநிலங்கள் வாரியாக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் புதுவையிலும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைய தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி, ஆணையத்தின் செயல்பாடுகளை தொடங்கிவைத்தார். ஆணையத்தின் செயலாளராக மாவட்ட கலெக்டரான சத்யேந்திரசிங் துர்சாவத் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தலைவராக தேவிப்பிரியாவும், உறுப்பினர்களாக ரவி, கலைச்செல்வி, பிரியவதனா, பத்மலட்சுமி, கிருஷ்ணகுமார் மற்றும் அமுதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நியமனத்துக்கான உத்தரவுகளை அமைச்சர் கந்தசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் ராகிணி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story