மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்


மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கர்நாடக அரசு அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 9 Sep 2017 11:49 PM GMT (Updated: 9 Sep 2017 11:49 PM GMT)

பெங்களூருவில், பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்தது.

பெங்களூரு,

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ் (வயது 55). பத்திரிகையாளரும், எழுத்தாளருமான இவரை கடந்த 5–ந் தேதி இரவு மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். இந்த சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொலை குறித்து விசாரிக்க போலீஸ் ஐ.ஜி. பி.கே.சிங் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு விசாரணை குழுவினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொலையாளிகளை கைது செய்வதற்கான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், கொலையாளிகள் பற்றி துப்பு கொடுப்பவருக்கு கர்நாடக அரசு சார்பில் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் போலீஸ் மந்திரி ராமலிங்க ரெட்டி அறிவித்துள்ளார். இதற்கிடையே, கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டது பற்றி அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகம் கர்நாடக அரசிடம் கேட்டது.

அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் நேற்று கர்நாடக அரசின் தலைமை செயலாளர் சுபாஷ் சந்திர குந்தியா அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், கவுரி லங்கேஷ் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டது குறித்தும், கொலையாளிகளை பிடிக்க கர்நாடக அரசு அமைத்துள்ள சிறப்பு விசாரணை குழு குறித்தும், அதில் உள்ள அதிகாரிகள் பற்றியும், விசாரணை எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது குறித்த விவரங்களும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Next Story