அண்ணா நினைவு தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி


அண்ணா நினைவு தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
x
தினத்தந்தி 10 Sep 2017 12:09 AM GMT (Updated: 10 Sep 2017 12:09 AM GMT)

திருவண்ணாமலையில் நடைபெற்ற அண்ணா நினைவு மிதிவண்டி போட்டியில் 150–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை,

தமிழக முதல்– அமைச்சரின் உத்தரவின்பேரில் ஒவ்வொரு ஆண்டும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான போட்டி நேற்று காலை 7 மணி அளவில் திருவண்ணாமலையில் உள்ள அறிஞர் அண்ணா நுழைவு வாயில் அருகில் நடைபெற்றது.

இந்த போட்டியினை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனியன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் விஜயகுமாரி முன்னிலை வகித்தார். மாவட்ட மேம்பாட்டு திட்ட முதுநிலை மேலாளர் புகழேந்தி வரவேற்றார். இதில் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவலர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

இதில் 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், மாணவியருக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவியருக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவியருக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் என நிர்ணயிக்கப்பட்டு தனித்தனியே நடத்தப்பட்டது. இதில் சுமார் 150–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடம் பெற்றவர்களுக்கு பரிசும், தகுதி சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் 4 முதல் 10–வது இடம் வரை பெற்றவர்களுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்கப்பட்டது.


Next Story