ஆசிரியர்களும், மாணவர்களும் அர்ப்பணிப்புடன் கூடிய கல்விச் சேவை புரிய வேண்டும்
ஆசிரியர்களும், மாணவர்களும் அர்ப்பணிப்புடன் கூடிய கல்வி சேவைபுரிய வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற எழுத்தறிவு நாள் விழாவில் முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் பேசினார்.
திருவண்ணாமலை,
விழாவிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:–
ஏதாவது ஒரு மொழியில், புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். ஆசிரியர்களும், மாணவர்களும் அர்ப்பணிப்புடன் கூடிய கல்விச் சேவைபுரிய வேண்டும். இந்தியாவில் நமது அரசாங்கம் பல்வேறு வகையில் எழுத்தறிவின்மையை அகற்ற பள்ளி சாராக் கல்வி திட்டம், பின் தேசிய வயது வந்தோர் கல்வி திட்டம், மக்கள் செயல்முறை எழுத்தறிவுத் திட்டம் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி அதில் வெற்றியும் பெற்றுள்ளது.
அனைவருக்கும் கல்வித்திட்டம் கடந்த 2000–ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற இலக்கை இது கொண்டுள்ளது. இன்று வரை அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
எழுத்தறிவின்மை என்பது ஒரு குற்றம், அதை நாட்டை விட்டே அகற்றிட வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் எழுத்தறிவு பெற்றோர் 81 சதவீதமாக உள்ளது. இதை 100 சதவீதமாக மாற்றுவதற்காகவும், நம் மாவட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் சுமார் 40 ஆயிரம் பேர் மொழிச் சிந்தனையற்றவர்களாக தாய் மொழியிலேயே எழுதப் படிக்க தெரியாதவர்களாக உள்ளனர். அனைவரும் எழுத்தறிவு பெற ஏற்ற சூழ்நிலையை பள்ளிகளிலும், சமூகத்திலும் உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.