உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 10 Sept 2017 10:58 AM IST (Updated: 10 Sept 2017 10:58 AM IST)
t-max-icont-min-icon

அவள் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறாள். பெற்றோர் அவளுக்கு வரன் தேடினார்கள்.

வள் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறாள். பெற்றோர் அவளுக்கு வரன் தேடினார்கள். சுயதொழில் செய்துகொண்டிருக்கும் இளைஞனுக்கு அவளை பெண் கேட்டார்கள். அவனது குடும்பம் வசதியானது.

பெண்ணின் உறவினர்கள் இருவர், வரனை பற்றி விசாரித்துவிட்டு வந்து, ‘நல்ல பையன்தான். திருமணம் செய்துகொடுக்கலாம்’ என்றார்கள். பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டரை பெண் பார்க்க வரும்படி கூற, அடுத்த சில நாட்களில் ஆடம்பர காரில் வந்திறங்கினார்கள்.

வரனின் குடும்பமே பளிச்சென்று இருந்தது. எல்லோரும் மலர்ந்த முகமாய், உற்சாகமாய் காணப்பட்டார்கள். ஆனால் மாப்பிள்ளையாகப்போகும் இளைஞன் மட்டும் சோர்வாக காணப்பட்டான். குடும்பத்தினர் அவனிடம் சிரித்துப்பேசி அவனையும் சிரிக்கவைக்க முயற்சித்துக்கொண்டிருந்தார்கள். பேச்சுவாக்கில் தங்களுக்கு வரதட்சணை, சீர் எதுவும் தேவையில்லை என்று கூறிவிட்டதால், பெண்ணின் பெற்றோர் உச்சிகுளிர்ந்து காணப்பட்டார்கள்.

பெண் அழகாக இருப்பதால் மாப்பிள்ளை வீட்டாருக்கு ரொம்பவும் பிடித்துப்போனது. ‘எங்களுக்கு பெண்ணை பிடித்திருக்கிறது. இருவரும் சந்தித்து பேசட்டும். பெண்ணுக்கும் பிடித்துவிட்டால், சிம்பிளாக நிச்சயதார்த்தம் செய்துவிடலாம்’ என்றார்கள்.

அதன்படி இருவரும் தனியறையில் சந்தித்துப் பேசினார்கள். அவள் நிறைய பேச, அவன் கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தான். அவள் பேச்சுவாக்கிலே, ‘உங்களுக்கு குடிப்பழக்கம் உண்டுமா?’ என்று கேட்டாள். இந்த கேள்வி அவனுக்கு லேசான அதிர்ச்சியை கொடுத்தது. ‘அப்படி எதுவும் இல்லை’ என்று அவசரமாக மறுத்தான்.

அவர்கள் இருவரும் பேசிமுடித்துவிட்டு வெளியே வரும் முன்பே பெண்ணின் தாயார், ‘எங்களுக்கு மாப்பிள்ளையை பிடித்திருக்கிறது. எங்க பொண்ணு நாங்க சொல்றதை தட்டமாட்டாள்’ என்று கூற, வரனின் வீட்டார் உடனே நிச்சயதார்த்தத்திற்கு ரெடியாகிவிட்டார்கள். தட்டு ஒன்றை வாங்கி பழம், பூவை அடுக்கி, ஒரு பேப்பரில் சம்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கும் கடிதத்தையும் எழுதிவிட்டார்கள்.

அறையை விட்டு வெளியே வந்த பெண்ணுக்கு அந்த அவசர ஏற்பாடுகள் பிடிக்கவில்லை என்றாலும், ‘ஏற்பாடுகளை நிறுத்துங்கள்... அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்’ என்று அவள் சொல்லும் அளவுக்கு சூழ்நிலை அங்கே அமையவில்லை.

நிச்சயதார்த்தம் நடந்தது. உடனே மாப்பிள்ளையின் அம்மா, விலை உயர்ந்த செல்போன் ஒன்றை அவளிடம் கொடுத்து, ‘அவன் உன்னோடு பேசுவான். நீயும் தேவைப்படும்போது பேசிக்கொள். ஆனால் இவன் இரவு பத்து மணிக்கு தூங்கச்சென்றுவிடுவான். அதற்குள் பேசிவிடு’ என்று கூறிவிட்டு கிளம்பினார்கள்.

பெண் ஒரு வாரம் செல்போனை கையில்வைத்துக்கொண்டே காத்திருந்தாள். அவனிடமிருந்து அழைப்பு எதுவும் வரவில்லை. அதனால் அவள் தனது தோழியிடம் போய் தனது வருங்கால கணவர் சோர்வாக காணப்பட்டதையும், குடி பற்றிய கேள்விக்கு அதிர்ந்ததையும், நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொன்னாள்.

தோழி, ‘இந்த காலத்தில் எந்த இளைஞனும் இரவு பத்து மணிக்கு தூங்கமாட்டான். இதில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது. அதனால் நாம் பத்து மணிக்கு மேல் அவரது நம்பருக்கு அழைத்துப்பார்ப்போம்’ என்றவள், அன்று இரவு பத்து மணிக்கு மேல் தனது நம்பரில் இருந்து அழைத்தாள். எதிர்முனையில் அழைப்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் மீண்டும் அழைத்தாள்.

சிறிது நேரம் கழித்து சலிப்போடு போனை எடுத்தவன், ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்து ‘நீங்க யாரு?’ என்றான். அவன் நாக்கு உளறுவதை புரிந்துகொண்ட தோழி, தொடர்பை துண்டிக்காமல் அவனை வெறுப்பேற்றும் விதமாகப் பேச, அவன் உளறலோடு கோபத்தில் கத்திவிட்டு, பக்கத்தில் இருந்தவனிடம் போனை கொடுத்து ‘எவளோ ஒருத்தி எரிச்சல்படுத்துறாள். நீ பேசி என்னென்னு விவரம் கேளுடா!’ என்று கூற அவன், ‘நிம்மதியா ராத்திரி தண்ணியடிக்கக்கூட விடமாட்டீங்களாடி?’ என்று கேட்டு, வாய்க்கு வந்தபடி உளறினான்.

எல்லாவற்றையும் ஸ்பீக்கரில் கேட்ட பெண், தனக்கு நிச்சயம் செய்யப்பட்டிருப்பவன் தினக்குடிகாரன் என்பதை உணர்ந்தாள். இரவு பத்து மணிக்குள் பேசும்படி அவனது அம்மாவே சொன்னதால் அவன் குடிப்பழக்கம் குடும்பத்திற்கே தெரியும் என்பதும் அவளுக்கு புரிந்தது.

தோழியால் தப்பித்தோம் என்று நினைத்தவள் நிச்சயதார்த்தத்தையும் ரத்து செய்துவிட்டு நிம்மதியாக இருக்கிறாள்.

- உஷாரு வரும்.

Next Story