இன்பமே இன்னும் வா - என்.சி.மோகன்தாஸ்


இன்பமே இன்னும் வா - என்.சி.மோகன்தாஸ்
x
தினத்தந்தி 10 Sep 2017 7:23 AM GMT (Updated: 10 Sep 2017 7:23 AM GMT)

மந்திரி ரத்னாகரின் பினாமி பெயரில் இயங்கும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மீது வெடிக்கும் ரசாயன பொருட்களை ஏற்றி வந்த லாரி மோதி கட்டிடத்திற்கு கடும் பாதிப்பும், உயிர் சேதமும் ஏற்படுகிறது.

முன்கதை சுருக்கம்:

ந்திரி ரத்னாகரின் பினாமி பெயரில் இயங்கும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மீது வெடிக்கும் ரசாயன பொருட்களை ஏற்றி வந்த லாரி மோதி கட்டிடத்திற்கு கடும் பாதிப்பும், உயிர் சேதமும் ஏற்படுகிறது. அந்த சமயத்தில் மீடியாவில் பணிபுரியும் சுவீகாவும், மணீசும் அந்த வழியாக காரில் சென்றதால் அவர்களும் விபத்தில் சிக்குகிறார்கள். இதில் சுவீகா காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவளது பக்கத்து படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த பெண், கொலை செய்யப்படுகிறாள். மணீசும், சுவீகாவும் சேர்ந்துதான் அந்த பெண்ணை கொலை செய்ததாக போலீசார் சந்தேகப்படுகிறார்கள். இதையடுத்து இருவரும் கொலையாளியை பற்றிய விவரங்களை சேகரிக்க களம் இறங்குகிறார்கள். அப்போது டி.எஸ்.பி. சந்தோஷ், கொலை சம்பவம் பற்றி தனக்கு கிடைத்த சில தகவல்களை மணீஷிடம் பகிர்ந்து கொள்கிறார். அதை வைத்து மணீசும், சுவீகாவும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர், வேலை பார்த்த அலுவலகத்தில் விசாரிக் கிறார்கள். இதற்கிடையே மந்திரி ரத்னாகரின் மகன் நகிலன் அவரை தொடர்பு கொண்டு கெட்ட செய்தி ஒன்று தனக்கு கிடைத்திருப்பதாக கூறுகிறான். அத்துடன் ஆசை நாயகி வீட்டில் இருக்கும் ரத்னாகரை சந்திக்க செல்கிறான்.

நகிலன் வண்டியிலிருந்து இறங்கியதுமே, அரவம் கேட்டு ரத்னாகரின் ஆசை நாயகி வெளியே வந்து புன்னகைத்து “வா தம்பி!” என்றாள்.

அவன், அவளை பொருட்படுத்தாமல் ஒதுங்கி உள்ளே நுழைந்து’

“அப்பா.. அப்பா!” என்றான்

அவளும் பின் தொடர்ந்து, “அப்பா பாத்ரூமுல இருக்கார். உட்காருங்க வந்துடுவார்!” என்று சமையல் அறைக்கு நடந்தாள்.

அவள் அன்போடு காபி கொண்டு வந்து நீட்ட, “இதெல்லாம் எங்கிட்ட வேணாம்ன்னு எத்த னையோ தடவை சொல்லியிருக்கேன்!” என்று முகத்தை திருப்பிக்கொண்டான்.

“நான் உங்கம்மா மாதிரிப்பா”

“அம்..மா! வாயில் வருது.. வசியம் பண்ணி முடிஞ்சு வெச்சுக்கிட்டு”

அதற்குள் பாத்ரூமில் இருந்து லுங்கியும், வெறும் மார்புமாய் துண்டில் கையைத் துடைத்தபடி வெளிப்பட்ட ரத்னாகர், “வந்துட்டியா.. என்ன கெட்ட செய்தி..” என்று அவனுக்கு எதிரே அமர்ந்தார். அங்கிருந்த காபியை எடுத்து சுவைத்தபடி, “நீ சாப்பிடலே?”

“வேணாம்”

“ஏண்டா... உனக்கு இத்தனை வைராக்கியம். ஒங்கம்மாவை விட இவள் எல்லா விதத்திலும் பெட்டர். நல்லா கவனிச்சுக்கிறாள். நல்ல காபி.. வாய்க்கு ருசியா சாப்பாடு. மனசுக்கு ருசியா கனிவு. தளர்ந்து போகும் போதெல்லாம் தோள் கொடுக்கிறா. வாழ்க்கையையே எனக்காக அர்ப்பணிச்சிருக்கா!”

“ஆமா.. அர்ப்பணிப்பு! வெளியே தலைகாட்ட முடியலே. அசிங்கம்!”

“எதுடா அசிங்கம்..?” என்று அவனது கன்னத்தை திருப்பி, “உனக்கோ, குடும்பத்துக்கோ என்ன குறை வெச்சேன்? உங்கம்மாவுக்கு சதா சொகுசு மினுக்கு வேணும். கார்-பங்களா-நகை நட்டு-போலி கவுரவம் வேணும். இதற்கிடையில் என்னை கவனிக்க நேரமில்லை. இப்போ ரெய்டு வந்து கிச்சனை தோண்டினாங்க. அதுநான் செய்த குத்தமா..? உங்கம்மாவின் பேராசை! அதுக்கு என் பொதுவாழ்க்கை பலியாகிறது. அதெல்லாம் உங்களுக்கு அசிங்கமாத் தெரியலை..!

ஏன் உன் விஷயத்துக்கே வருவோமே.. பெஸ்ட் காலேஜிலே லட்சம் லட்சமாக பணம் கட்டி சேர்த்து விட்டேன். ஒழுங்கா படிச்சியா நீ? ஊர் சுத்தி பொண்ணுங்க பின்னாடி திரிஞ்சு உருப்படாம போறேன்னு வெளிநாட்டுக்கு அனுப்பினா அங்கேயும் பெயிலாகி வந்தாய்! அதுக்கப்புறமும் தறுதலை பசங்களோட சேர்ந்துக்கிட்டு, ரவுடியிசம். காதல் கருமம்ன்னு சொல்லி பாவப்பட்டவங்களை ஏமாத்தினே!

என் பவரை பயன்படுத்தி கொள்ளை, மிரட்டி காரியம் சாதிக்கிறது! சரி பொறுப்பு வரட்டும்ன்னு தொழில் ஆரம்பிச்சு கொடுத்தால் அதிலாவது நேர்மையாய் இருக்கிறாயா...? அதிகாரிகளிடமிருந்து ஏகப்பட்ட புகார்கள்!”

“அவனவனுக்கு பொறாமை?”

“எதுக்கு?”

“வேற எதுக்கு... என் வளர்ச்சி பொறுக்காமத்தான்! என்னவோ பெரிசா தொழில் ஆரம்பிச்சுக் கொடுத்ததா பீத்திக்கிறீங்க! நீங்க போட்ட முதல் வெறும் இருபத்தி ஐந்து லட்சம்! பிசினஸை டெல்லி, மும்பை, சிங்கப்பூர்ன்னு விரிவாக்கி இன்னைக்கு நாலு கோடி டேர்ன் ஓவர்!”

“ஆமா.. இதெல்லாம் முறைப்படி நடக்குதா.. தோ பார்டா.. பணம் எப்படி வேணாலும் சம்பாதிக்கலாம். ஆனால் அதிலே ஒரு தர்ம நியாயம் இருக்கணும். வீட்டுக்கு வந்தா நிம்மதி இருக்கணும். எத்தனை செஞ்சு கொடுத்தாலும் திருப்தியடையாமே சதா சண்டை பிடிக்கிற ஒங்க அம்மா எங்கே..ஒண்ணா கல்லூரியில படிச்சு அன்னிலேயிருந்து நான்தான் உலகம்ன்னு எனக்காகவே வாழ்கிற இவ எங்கே! அதெல்லாம் பட்டாம்பூச்சியான உனக்கு சொன்னா புரியாது. நீ வந்த விஷயத்தை சொல்!”

“அப்பா.. சி.எம். முடிவு பண்ணிட்டார்!”

“என்னண்ணு?”

“வீட்டுல ரெய்டு, சி.பி.ஐ. எப்.ஐ.ஆர்.ன்னு மீடியாவுல நாறுவதால் உங்களை பதவியிலிருந்து தூக்கறதா?”

“தூக்கிட்டு போகட்டுமே.. அதனாலென்ன..?”

“ஆமா. ஒங்களுக்கு ஒண்ணும் இல்லை. உங்க பதவி போயிட்டா அப்புறம் எங்களை எவன் மதிப்பான்? என் பிசினஸ்சும் தகர்ந்திடும்!”

“இப்போ.. இதுதான் உன் கவலையா?”

“எதுவும் சும்மா வருவதில்லை. தறுதலை, பெண் பொறுக்கி, உருப்படாதவன்னு சபிச்சு, சபிச்சு எனக்கு என் பேரிலேயே மரியாதை இல்லாம போச்சு! எக்காரணம் கொண்டும் நீங்க பதவியை விட்டுக்கொடுக்கக் கூடாதுப்பா!”

“விட்டுக்கொடுக்காம..?”

“எதுக்கு விட்டுக்கொடுக்கணும்? கட்சி, ஆட்சின்னு எவ்வளவோ செஞ்சிருக்கீங்க. உங்களுக்கு ஆதரவாய் கணிசமா எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்கங்கிறதை அவர்கள் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன்.”

“மறக்காம என்ன பண்ணப் போறியாம்..?”

“ஆட்சியை கவிழ்ப்பேன்!”

“கவிழ்த்துட்டா எல்லாம் ஆச்சா..? திரும்ப ஆட்சிக்கு வருவோம்ன்னு நினைக்கிறாயா?”

“ஏன் முடியாது. நான்..?’

“முதல்ல இந்த ‘நான்’ஐ நிறுத்து. வருத்தமோ கஷ்டமோ தெரியாம வளர்ந்ததால் உனக்கு எல்லாமே எகத்தாளமா இருக்கு. ஈஸியா தெரியுது”

“சரிப்பா உங்க ரூட்டுக்கே வரேன். ஆட்சியை கவிழ்க்க நான் ஒண்ணும் மடையனில்லை. அது ஒரு மிரட்டல். அவ்வளவே..”

“மிரட்டி..?”

“அப்படி ஒருவேளை நீங்க பதவியை விட்டுப் போகணும்ன்னா... அதை எனக்கு கொடுங்கன்னு கேட்பேன்!”

“உனக்கா..? அதுக்கு உனக்கென்ன தகுதி யிருக்கு?”

“அப்பா.. தகுதியை பார்த்தா எல்லோரும் மந்திரியாகுறாங்க?”

“நீ என்ன வேணாலும் தர்க்கம் பண்ணலாம். வீம்பு செய்யலாம். அதெல்லாம் கட்சியில யாரும் ஏத்துக்க மாட்டாங்கடா!”

“ஏத்துக்கிட்டாங்க.. ஏத்துக்க வெச்சுட்டுதான் உங்கக்கிட்டேயே வந்திருக்கேன். பேசாம நீங்க ராஜினாமா பண்ணிட்டு என்னை நாமினேட் பண்ணிருங்க!”

அதற்குள் அவனுக்கு போன் அழைப்பு வர, “அப்படியா.. சரி! இதோ வந்திடறேன்!” என்று கிளம்பினான்.

“அப்பா.. சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கில்லே.. நீங்க எதுக்கும் கவலைப் படாதீங்க. எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்!”

வாசல் வரைப் போனவன் திரும்பி வந்து, “இந்தாம்மா.. ஜாக்கிரதை! நான் போனதும் நீ பாட்டுக்கு ஏதாவது ஓதி வெச்சு மனசை மாத்திராதே.. என்ன தெரிஞ்சுதா?” என்றான் மிரட்டலுடன்.

முதல்-மந்திரியின் இல்லம்.

அவர் யோசனையுடன் அமர்ந்திருக்க, எதிரே முக்கியமான மந்திரிகளும், கட்சி தலைவரும் அவருக்கு இணையாக யோசனையில் இருந்தார்கள். அவர்களுடைய இப்போதைய யோசனை குடிநீர், வறட்சி, விவசாயி தற்கொலை, ஊழல் குற்றச்சாட்டு இப்படி எதை பற்றியும் இல்லை.

முக்கியமான விஷயம், முடிவெடுக்கணும் வாங்க என்று அழைத்திருந்தார்கள்.

“இதுதான் விஷயம். மந்திரி ரத்னாகரை ராஜினாமா பண்ண வைக்க வேண்டும். இல்லேன்னா நம்ம கட்சி மற்றும் ஆட்சியின் பெயர் கெட்டு விடும்”

“இனி கெடுவதிற்கு என்ன இருக்கு? எல்லாம்தான் கிழிகிழின்னு கிழிச்சுட்டாங்களே”

“ஆமா.. முதல்-மந்திரியே! கட்டாயம் அவரை மாத்தியாகணும்” என்று ரத்னாகரின் பரம எதிரியான மந்திரி வற்புறுத்த-

“மாற்றலாம். ஆனா.. அதுக்கு பதில் அவரோட மகனை போட்டாகணுமாம். ஓகேவா..?”

“மவனா.. யாரு.. அந்த நிகிலனா?”

“அதான் நானும் யோசிக்கிறேன். சும்மாகிடக் கிறதை பிடிச்சு மடியில வெச்சுக்கிட்டு குத்துதே குடையுதேங்கிறது தேவையா..? ரத்னாகர் ஊழல்ன்னாலும் கூட கட்சிக்கும், ஜனங்களுக்கும் நிறைய செஞ்சிருப்பவர். அவருக்குன்னு கணிசமா எம்.எல்.ஏக்களும் இருக்காங்க. அவரே தொடரட்டும்”

“அப்போ அவர் மகனை எப்படி சமாளிப்பீங்க...?”

முதல்-மந்திரி, “அதுக்கெல்லாம் வழியிருக்கு. பார்த்துக்கலாம்!” என்று புன்னகைத்து மந்திரிகள் சந்திப்பை முடித்து வைத்தார்.

மணீசும் சுவீகாவும் அப்போதுதான் டிரைவர் கோதண்டத்தின் மனைவியை சந்தித்துவிட்டு வந்திருந்தனர்.

அவரது மனைவி கொஞ்சம் திடமாகத்தான் தெரிந்தாள். ரொம்பவும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாமல் யதார்த்தம் உணர்ந்திருந்தாள்.“போனவர் பொறுப்பில்லாம போயிட்டார். இனி அவரை குத்தம் சொல்லி காரியமில்லை. என் புள்ளைங்களோட படிப்பு, கல்யாணம்ன்னு நான்தான் பார்க்கணும்!”

“அவரை கொலை பண்ற அளவுக்கு எதிரிங்க யாரு...?”

“தெரியலை ராசா. ஆனா கொஞ்ச நாளாகவே அவரோட போக்கு சரியில்லை. எங்கிட்டேயிருந்து நிறைய மறைச்சார். ராத்திரியில் திடீர் திடீர்ன்னு போன் வரும். எழுந்து போவார்”

“கடைசியா உங்ககிட்டே, விபத்துக்கப்புறம் எதாச்சும் சொன்னாரா...?”

“ஆமா... மெக்கானிக் மாணிக்கம்தான் விபத்துக்கு காரணம்ன்னு சந்தேகப்பட்டார்”

அவள் குறிப்பிட்ட அந்த மாணிக்கத்தை பார்க்க அவர்கள் கிளம்புகிற அதே தருணத்தில் - நடுரோட்டில் லாரி ஒன்று மாணிக்கத்தை இடித்து தேய்த்துவிட்டு பறந்திருந்தது.

(தொடரும்)

Next Story