பந்தலூரில் சம்பள உயர்வு கேட்டு டேன்டீ தொழிலாளர்கள் உண்ணாவிரதம்


பந்தலூரில் சம்பள உயர்வு கேட்டு டேன்டீ தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 11 Sept 2017 4:30 AM IST (Updated: 11 Sept 2017 12:35 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூரில் டேன்டீ தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி கலந்து கொண்டார்.

பந்தலூர்,

டேன்டீ தொழிலாளர்களுக்கு தினசரி சம்பளம் ரூ.350 வழங்க வேண்டும். தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும், டேன்டீ தொழிலாளர்களுக்கும் இடையே நிலவும் சம்பள வேறுபாடுகளை களைய வேண்டும். தோட்ட தொழிலாளர்களுக்காக கட்டப்பட்டுள்ள சேரம்பாடி கார்டன் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும். டேன்டீயில் பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

பழுதடைந்துள்ள டேன்டீ தொழிலாளர்களின் குடியிருப்புகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை, கழிப்பறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், தெருவிளக்கு உள்பட அடிப்படை வசதிகளை தோட்ட தொழிலாளர்களுக்கு செய்து கொடுக்க வேண்டும். டேன்டீ தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணபலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பந்தலூரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதன்படி கோரிக்கைகளை வலியுறுத்தி பந்தலூர் நெல்லியாளம் நகராட்சி வணிக வளாகம் முன்பு டேன்டீ தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடத்தினர்.

போராட்டத்துக்கு கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் காசிலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மணிகண்டன், தோட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க துணை பொதுச்செயலாளர் மாடசாமி, ஏ.ஐ.டி.யு.சி. பாலகிருஷ்ணன், சி.ஐ.டி.யு. ரமேஷ், காங்கிரஸ் கட்சி நிர்வாகி கோபிநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ராஜேந்திரபிரபு உள்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

உண்ணாவிரத போராட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.


Next Story