பள்ளிக்கல்வி துறையுடன் பழங்குடியினர் உண்டு–உறைவிட பள்ளிகளை இணைக்க வேண்டும்
பள்ளிக்கல்வி துறையுடன் பழங்குடியினர் உண்டு–உறைவிட பள்ளிகளை இணைக்க வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஈரோடு,
தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் இருளர் பாதுகாப்பு சங்கம் ஆகியவற்றின் சார்பில் ஈரோடு செங்குந்தர் மேல்நிலை பள்ளிக்கூட வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில அமைப்பாளர் வி.பி.குணசேகரன் தலைமை தாங்கினார்.
செங்குந்தர் கல்விக்கழக செயலாளர் எஸ்.சிவானந்தன் முன்னிலை வகித்தார். மக்கள் கண்காணிப்பக செயல் இயக்குனர் ஹென்றி திபென் கூட்டத்தை தொடங்கி வைத்தார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வெ.வசந்திதேவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
* தமிழகம் முழுவதும் உள்ள பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில், ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பல ஆண்டுகளாகவே நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் பழங்குடியின குழந்தைகளின் கல்வித்தரம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே உடனடியாக ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும்.
* பழங்குடியின மாணவ –மாணவிகளின் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பழங்குடியினர் உண்டு–உறைவிட பள்ளிகள் அனைத்தையும், தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறையுடன் இணைக்க வேண்டும். திட்ட செயலாக்கத்தையும், தொடர் கண்காணிப்பையும் பள்ளி கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும்.
* பழங்குடியின மக்களின் வாழ்வியலை நன்கு அறிந்த, அவர்களின் நலனில் அக்கறையுள்ள அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களை நன்கு தேர்வு செய்து பணி அமர்த்த வேண்டும். விடுதி காப்பாளர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் விடுதிகளில் தங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
* விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 50 என நிர்ணயம் செய்வதை தவிர்த்து, படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இருத்தல் வேண்டும்.
* பழங்குடி மக்களின் வாழ்வியலை உள்ளடக்கிய தனி பாடத்திட்டத்தை அரசு உருவாக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க தலைவர் நஞ்சப்பன், மலைவாழ் மக்கள் சங்க பொறுப்பாளர் சண்முகம், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர் பிரபா கல்விமணி, வக்கீல் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.