வடகிழக்கு பருவமழையை சமாளிக்க அனைத்துத்துறை அலுவலர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு
வடகிழக்கு பருவமழையை சமாளிக்க அனைத்துத்துறை அலுவலர்களும் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசியதாவது:–
வடகிழக்கு பருவமழையின்போது எளிதில் தொடர்பு கொள்ள வசதியாக அனைத்து துறைகள், தொண்டு நிறுவனங்களின் தொலைபேசி எண்களை அலுவலர்கள் சேகரித்து வைத்திருக்க வேண்டும். கலெக்டர் அலுவலக அவசர கால செயல் மையத்தில் கட்டுப்பாட்டு அறை உள்ளது. அங்குள்ள இலவச கட்டணமில்லா தொலைபேசி மூலம் வரும் புகார்களை பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமும் காலை 7 மணிக்குள் தாசில்தார்கள், மழை பதிவு விவரங்களை தவறாமல் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும். மனித உயிரிழப்பு, கால்நடை உயிரிழப்பு, வீடுகள் சேதம் தொடர்பான அறிக்கையை உடனுக்குடன் தாசில்தார்களால் தெரிவிக்கப்பட வேண்டும்.
காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், பருவமழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பாதிப்பு ஏற்படும் பகுதி மக்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்க வேண்டும். தீயணைப்பு துறையினர் மீட்பு படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களை தங்க வைப்பதற்கு புயல் பாதுகாப்பு இல்லங்கள், பள்ளி கட்டிடங்கள், சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்களை பொதுப்பணித்துறையினர் தேர்வு செய்து வைத்திருக்க வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வெள்ளப்பெருக்கை தடுக்க மணல் மூட்டைகளை தயாராக வைத்திருக்க வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறையினர், சாலைகளில் மரங்கள் விழுதல், மின்கம்பிகள் அறுந்து விழுதல், மின்கம்பங்கள் சாய்தல் போன்றவற்றை உடனுக்குடன் சரிசெய்து சீரான போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் ரேஷன் கடைகளில் போதிய உணவுப்பொருட்களை இருப்பில் வைத்திருக்க வேண்டும். புயல், மழை, வெள்ளம் குறித்த தகவல்களை கிராம சபை கூட்டத்தில் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊராட்சி ஒன்றியங்களில் குளங்கள், ஏரிகள், குட்டைகள் பாதுகாப்பு தன்மையுடன் உள்ளதா என்பதை முன்கூட்டியே ஆய்வு செய்ய வேண்டும். மழைக்கால தொற்றுநோய்களுக்கு ஏற்றபடி போதிய மருந்துகளை சுகாதார துறையினர் இருப்பில் வைத்திருக்க வேண்டும். அரசு ஊழியர்கள் விடுப்பில் செல்லாமல் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.