திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் எடுப்போர் மீது கடும் நடவடிக்கை


திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் எடுப்போர் மீது கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 10 Sep 2017 11:30 PM GMT (Updated: 10 Sep 2017 7:45 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக குடிநீர் எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சுந்தரவல்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அனைவருக்கும் குடிநீர் கிடைக்கும் வகையில் உரிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இதில் ஒரு சிலர் விதிகளை மீறி அனைவருக்கும் கிடைக்கும் குடிநீரை மோட்டார் பம்ப் மற்றும் உரிமம் பெறாத ஆழ்துளை கிணறு போன்றவற்றின் மூலம் சட்டத்திற்கு புறம்பாக எடுத்து வருகின்றனர்.

எனவே சட்டத்திற்கு புறம்பான மின்மோட்டார்கள் மூலம் வீட்டு இணைப்புகளின் வழியாக குடிநீர் எடுப்போர், வேளாண் நிலங்களில் உள்ள கிணற்று நீரை சட்டத்திற்கு புறம்பாக எடுப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உரிமம் இன்றி குடிநீர் எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்ளாட்சிகளில் நகராட்சி ஆணையர், செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சித்துறை அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிலத்தடி நீரை பொறுத்தமட்டில் தாசில்தார்கள் நிர்வாக நடுவராக செயல்பட்டு உரிய நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் நிலத்தடி நீரை சட்டத்திற்கு புறம்பாக எடுப்போர் பற்றிய விவரங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள தாசில்தார், நகராட்சி ஆணையர், செயல்அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகங்களுக்கு நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ, எழுத்து மூலமாகவோ தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story