போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள அரசு ஊழியர்களை, ஆட்சியாளர்கள் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும்


போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள அரசு ஊழியர்களை, ஆட்சியாளர்கள் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும்
x
தினத்தந்தி 10 Sep 2017 10:45 PM GMT (Updated: 10 Sep 2017 9:07 PM GMT)

போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள அரசு ஊழியர்களை, ஆட்சியாளர்கள் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

தூத்துக்குடி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 22-வது மாநில மாநாடு தூத்துக்குடியில் வருகிற பிப்ரவரி மாதம் 17-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்கிறது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டின் நிறைவு நாளான 20-ந் தேதி நடைபெறும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் கரத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இதேபோல் அன்று நடைபெறும் பேரணியில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை கலந்து கொள்வதற்கு அழைத்து உள்ளோம். கட்சியின் 22-வது அகில இந்திய மாநாடு ஏப்ரல் மாதம் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு கோரியும், கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலில் சேர்க்க கோரியும், நீட்டுக்கு விதிவிலக்கு கிடைக்காத காரணத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் வருகிற 13-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முழுமையாக பங்கேற்கும். நீட் தேர்வுக்கு விலக்கு கோரி போராடக்கூடிய மாணவர்களை, இளைஞர்களை போலீசார் தாக்குவதோடு, கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும்.

புதுச்சேரி ஜிப்மர், டெல்லி உள்ளிட்ட 7 இடங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி, சண்டிகரில் உள்ள மத்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் ஆகியவை மத்திய அரசால் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்வி நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்களுக்கு தனியாக சட்டம் உள்ளது. இதற்கு நீட் தேர்வு பொருந்தாது. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு நீட் பொருந்தாது என்று தனியாக சட்டம் இயற்றி உள்ளபோது, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் பொருந்தாது, இதற்கு விதிவிலக்கு வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளின் கட்டண கொள்ளையை தடுக்க மத்திய அரசு தனியாக சட்டம் கொண்டு வர வேண்டும்.

தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. இதனால் கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகள் கவர்னரை சந்தித்து சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி உள்ளோம். அரசு ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை ஆட்சியாளர்கள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story