வாழப்பாடி அருகே போலி டாக்டர் கைது


வாழப்பாடி அருகே போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 10 Sep 2017 11:00 PM GMT (Updated: 2017-09-11T02:39:22+05:30)

வாழப்பாடி அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

வாழப்பாடி,

சேலம் மாவட்டத்தில் அவ்வப்போது பெய்துவரும் மழையால் பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்.

இதனிடையே, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவம் படிக்காத போலி டாக்டர்கள் குறைந்த விலையில் சிகிச்சை அளித்து வருவதாக புகார் எழுந்தது. இந்த நபர்களிடம் சிகிச்சை பெறுபவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் வாழப்பாடி அருகே உள்ள திருமனூர் பகுதியில் நேற்று மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி உத்தரவின்பேரில், சுகாதாரத்துறையினர் டெங்கு விழிப்புணர்வு முகாமில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிகிச்சை அளித்துவிட்டு ஒருவர் மருந்து பொருட்களுடன் வந்தார்.

அங்கு நின்று கொண்டிருந்த வாழப்பாடி வட்டார அரசு மருத்துவர்கள் பிரசன்ன தீபா, நந்தினி ஆகியோருக்கு அந்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 40) என்பதும், பி.ஏ. அஞ்சல் வழி கல்வி மூலம் படித்து முடித்துவிட்டு கடந்த 3 ஆண்டுகளாக மோட்டார் சைக்கிளில் கிராமப்புற பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் என்பதும் தெரியவந்தது.

மேலும் நாமகிரிப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் உதவியாளராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மஞ்சுநாதன் வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் வழக்குப்பதிவு செய்து மஞ்சுநாதனை கைது செய்தார். 

Related Tags :
Next Story