மனநலம் குன்றிய 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை


மனநலம் குன்றிய 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை
x
தினத்தந்தி 10 Sep 2017 10:54 PM GMT (Updated: 10 Sep 2017 10:54 PM GMT)

தானேயில், மனநலம் குன்றிய 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.

தானே,

தானே கல்வாவை சேர்ந்தவர் சந்திப்(வயது35). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அர்ச்சனா(32). இந்த தம்பதிக்கு 7 வயதில் சர்தக் மற்றும் வரத் என்ற இரண்டு மகன்கள் உண்டு. இருவரும் இரட்டையர்கள். ஆனால் சிறுவர்கள் இருவரும் பிறந்தது முதலே மனநலம் குன்றிய நிலையில் இருந்து வந்தனர்.

மனநலம் குன்றிய மகன்களால் அர்ச்சனா மிகுந்த விரக்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை சந்திப் வேலை முடிந்து வீடு திரும்பினார்.

அப்போது, படுக்கையறையில் மகன்கள் இருவரும் பிணமாக கிடந்தனர். மின்விசிறியில் அர்ச்சனா தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். இதை பார்த்து சந்திப் அதிர்ச்சியில் உறைந்தார்.

மனைவி மற்றும் மகன்களின் உடல்களை பார்த்து சந்திப் கதறி அழுதார். தகவல் அறிந்து வந்த கல்வா போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், மகன்கள் இருவரையும் கொன்று விட்டு, அர்ச்சனா துக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சம்பவத்திற்கு முன் அவர் கணவருக்கு எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. அதில், ‘ஏன் இந்த விபரீத முடிவை எடுத்தேன், என்பதற்கான காரணத்தை நீங்கள் (சந்திப்) புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்’ என்று எழுதப்பட்டு இருந்தது.

அர்ச்சனா தனது மகன்களை கழுத்தை நெரித்து கொன்று இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும் சிறுவர்களின் உடலில் காயங்களும் இருந்ததாக தெரிவித்தனர். பிரேத பரிசோதனையில் தான் அவர்கள் இருவரும் எப்படி கொல்லப்பட்டனர் என்பது தெரியவரும்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகன்களை கொன்று தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story