எம்.எல்.ஏ.க்களுக்கு தனித்தனி நீச்சல் குளத்துடன் சொகுசு அறைகள்


எம்.எல்.ஏ.க்களுக்கு தனித்தனி நீச்சல் குளத்துடன் சொகுசு அறைகள்
x
தினத்தந்தி 11 Sept 2017 5:05 AM IST (Updated: 11 Sept 2017 5:05 AM IST)
t-max-icont-min-icon

சொகுசு விடுதியில் உள்ள டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் தனித்தனி நீச்சல் குளத்துடன் கூடிய சொகுசு அறைகளில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குடகு,

டி.டி.வி. தினகரன் அணியை சேர்ந்த ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரை, தமிழ்நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்க தினகரனுக்கு உதவிகள் செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக பெங்களூருவை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் உதவியதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா ஒசகோட்டை பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரை தங்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று உள்ளது.

ஆனால் அங்கு பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததால், அந்த விடுதி உரிமையாளரின் ஆலோசனைப்படி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் குஷால்நகர் பகுதியில் உள்ள ‘ பெண்டிங் பான்‘ சொகுசு விடுதியில் தங்கிவைக்கப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

5 ஏக்கர் காபி தோட்டத்திற்குள் அமைந்து உள்ள இந்த சொகுசு விடுதியில் மொத்தம் 50 அறைகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இங்குள்ள ஒவ்வொரு அறைகளிலும் நீச்சல் குளம் உள்ளிட்ட சகல வசதிகள் அதற்குள் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரியவந்து உள்ளது. தற்போது டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் அங்கு தங்க வைக்கப்பட்டு உள்ளதால் விடுதி நிர்வாகம் அங்குள்ள ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கி உள்ளனர்.

மேலும் அங்கு தங்கி உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு உணவு உள்ளிட்ட சிலவற்றை செய்து தருவதற்காக மட்டும் சில ஊழியர்கள் அங்கேயே தங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. பெங்களூருவை சேர்ந்த அந்த அரசியல் பிரமுகர், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரின் ஆதரவாளர் எனவும் கூறப்படுகிறது.


Next Story