பொதுத்துறை வங்கிகளில் 7883 கிளார்க் வேலை ஐ.பீ.பி.எஸ். எழுத்து தேர்வு அறிவிப்பு


பொதுத்துறை வங்கிகளில் 7883 கிளார்க் வேலை ஐ.பீ.பி.எஸ். எழுத்து தேர்வு அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Sep 2017 1:30 PM GMT (Updated: 11 Sep 2017 8:04 AM GMT)

பொதுத்துறை வங்கிகளில் 7 ஆயிரத்து 883 கிளார்க் பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் பின் வருமாறு:-

வங்கிப் பணிகளுக்கான தேர்வாணையமாக ‘இன்ஸ்டிடூயூட் ஆப் பாங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐ.பீ.பி.எஸ்.)’ அமைப்பு செயல்படுகிறது. இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 19 பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் கிளார்க் மற்றும் புரபெசனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான பொது எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலை இந்த அமைப்பு நடத்தி வருகிறது.

தற்போது கிளார்க் பணிகளுக்கான 7-வது எழுத்து தேர்வை (சி.டபுள்யூ.இ.-7) ஐ.பீ.பி.எஸ். அறிவித்து உள்ளது. மொத்தம் 7 ஆயிரத்து 883 பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 1277 இடங்கள் உள்ளன. இதற்கான எழுத்து தேர்வு நவம்பர்/டிசம்பர் மாதங் களில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. பட்டப்படிப்பு படித்த தகுதியான இளைஞர்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. இதர தகுதி விவரங்களை கீழே பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-9-2017-ந் தேதியில் 20 முதல் 28 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 2-9-1989 மற்றும் 1-9-1997 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விரு தேதிகளில் பிறந்தவர் களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு
அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது இதற்கு இணையான படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கணினி இயக்கும் திறனும் அவசியம்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பிப்பவர்களுக்கு பொது எழுத்துத் தேர்வு நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகிய இருநிலை எழுத்து தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் அட்டை வழங்கப்படும். இந்த தேர்வை அனுமதிக்கும் 19 பொதுத் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளிவரும்போது, ஐ.பீ.பி.எஸ். அமைப்பு வழங்கிய மதிப்பெண் சான்றுடன் கலந்து கொண்டு பணி நியமனம் பெறலாம்.

கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.600 ஐ கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி./எஸ்.டி., பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர், முன்னாள் படைவீரர்கள் ரூ.100 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. கட்டணங்களை ஆன்லைன் முறையிலும், விண்ணப்ப செலான்களை பதிவிறக்கம் செய்து ஆப்லைன் முறையில் வங்கிகளில் நேரடியாகவும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உடையவர்கள் ஐ.பீ.பி.எஸ். இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்கலாம். முன்னதாக மார்பளவு புகைப்படம், கையொப்பம் போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வசதியாக ஸ்கேன் செய்து கொள்ளுங்கள். விண்ணப்பம் சமர்ப்பித்ததும், ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறைகளில் கட்டணத்தை செலுத்த வேண்டும். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை பிற்கால உபயோகத்திற்காக 2 கணினி பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

முக்கிய தேதிகள்:

ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 12-9-2017
விண்ணப்பிக்க கடைசி நாள் : 3-10-2017
முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாட்கள் : 2-12-2017, 3-12-2017, 9-12-2017, 10-12-2017
முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள் 21-1-2018
மேலும் விரிவான விவரங்களை www.ibps.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story