நாகர்கோவில் பஸ்சில் தற்கொலை செய்த புதுப்பெண்ணின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
நாகர்கோவில் வந்த அரசு பஸ்சில் திராவகம் குடித்து தற்கொலை செய்த கோவை புதுப்பெண்ணின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாகர்கோவில்,
கோவை மாவட்டம் மதுக்கரை அருகேயுள்ள செட்டியார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி முத்துசெல்வி (வயது 22). இவர் அங்குள்ள ஒரு நகை கடையில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு திருமணம் ஆகி 4 மாதங்கள் மட்டுமே ஆகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஊட்டியில் இருந்து நாகர்கோவில் வழியாக மார்த்தாண்டம் செல்லும் ஒரு அரசு விரைவு பஸ்சில் முத்துசெல்வி வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பஸ் கண்டக்டர், நாகர்கோவில் வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றினர். அப்போது முத்துசெல்வி திராவகம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் இதுபற்றி கோவையில் உள்ள முத்துசெல்வியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் முத்துசெல்வியின் பெற்றோர் மற்றும் கணவர் முருகன் ஆகியோர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று காலை வந்தனர். முத்துசெல்வியின் உடலை பார்த்து அவருடைய பெற்றோரும், கணவரும் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.
பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, முத்துசெல்வியை அவர் பணியாற்றிய நகை கடையில் வேறு பிரிவுக்கு மாற்றியதால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்தது தெரியவந்தது.
இதுபற்றி முத்துசெல்வியின் தந்தை கூறியதாவது:–
என் மகள் கடந்த சில நாட்களுக்கு முன் உறவினர் திருமணத்துக்காக சென்னை சென்றார். இதனால் அவர் வேலை பார்த்து வந்த நகை கடையில் ஒரு நாள் விடுப்பு கேட்டிருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக கூடுதலாக 2 நாட்கள் விடுப்பு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால் நகை கடையில் வேறு பிரிவுக்கு மாற்றியுள்ளதாக என் மகள் என்னிடம் தெரிவித்தார். மீண்டும் பழைய பிரிவுக்கே மாற்றித்தரும்படி கேட்டதாகவும் கூறினார். ஆனால் முத்துசெல்வியை பழைய பிரிவுக்கு மாற்றவில்லை. இதனால் அவர் மனவேதனையில் இருந்தார்.
இவ்வாறு அவர் அழுதுகொண்டே கூறினார்.
அதைத் தொடர்ந்து முத்துசெல்வியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
முத்துசெல்விக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் இதுகுறித்து நாகர்கோவில் கோட்டாட்சியர் ஜானகி விசாரணை மேற்கொள்ள உள்ளார்.