வெள்ளகோவில் அருகே இறந்த காளைக்கு இறுதி சடங்கு நடத்திய விவசாயி கோவில் கட்டி வழிபட முடிவு


வெள்ளகோவில் அருகே இறந்த காளைக்கு இறுதி சடங்கு நடத்திய விவசாயி கோவில் கட்டி வழிபட முடிவு
x
தினத்தந்தி 12 Sept 2017 7:00 AM IST (Updated: 12 Sept 2017 4:18 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவில் அருகே இறந்த காளைக்கு இறுதிச்சடங்கு நடத்திய விவசாயி ஒருவர், அந்த காளைக்கு கோவில் கட்டி வழிபடவும் முடிவு செய்துள்ளார்.

வெள்ளகோவில்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கம்பீரமான காளைகள் தான். இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தனது குடும்ப பெருமைக்காக காங்கேயம் காளைகளை வளர்த்து வருகிறார்கள். விவசாயிகள் தங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினரை போல் இந்த காளைகளை வளர்த்து வருவது வழக்கம்.

இதுபோல் காங்கேயத்தை அடுத்த வெள்ளகோவில் அருகே சேனாபதிபாளையத்தை சேர்ந்த விவசாயி சோமசுந்தரம்(வயது 49) கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணபுரம் கால்நடை சந்தையில் 1½ வயதுடைய காங்கேயம் இன காளைக்கன்று ஒன்றை விலைக்கு வாங்கி வளர்த்து வந்தார். 10–க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்து பால் வியாபாரமும் அவர் செய்து வருகிறார். இதுதவிர ரியல் எஸ்டேட் வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளார். சோமசுந்தரத்தின் மனைவி கார்த்திகா தேவி. மகள் மதுநிலா.

சோமசுந்தரத்தின் குடும்பத்தினர் அந்த காளைக்கன்றை அதிக பாசத்துடன் வளர்த்து வந்தார்கள். பூச்சிக்காளை ஆன பின் அந்த காளையின் கம்பீரமும், வனப்பும் பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்தது. இதன்காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.1 லட்சத்துக்கு அந்த காளையை பலர் விலைக்கு கேட்டுள்ளனர். ஆனால் சோமசுந்தரம் அந்த காளையை யாருக்கும் விலைக்கு கொடுக்கவில்லை. அந்த காளையை விற்பனை செய்யும் எண்ணமும் அவருக்கு இல்லை.

பாசத்தோடு வளர்த்த அந்த காளையை ‘பூச்சி’ என்றே செல்லமாக அழைத்தனர். இந்த நிலையில் வயது முதிர்வின் காரணமாக அந்த காளை நேற்று முன்தினம் மாலை இறந்தது. இதனால் சோமசுந்தரம் மற்றும் அவருடைய மனைவி, மகள் ஆகியோர் மிகவும் வருத்தம் அடைந்தனர். தனது குடும்ப உறுப்பினர் ஒருவர் இறந்து விட்டால் ஏற்படும் சோகம் போல் அந்த காளையின் இறப்பு அவர்களை வாட்டியது.

இதன்காரணமாக சோமசுந்தரம் அந்த காளைக்கு இறுதிச்சடங்கு நடத்தி புதைக்க திட்டமிட்டார். உடனடியாக தனது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு காளை இறந்த தகவலை தெரிவித்தார். 100–க்கும் மேற்பட்டவர்கள் சோமசுந்தரம் வீட்டுக்கு வந்து அவரிடம் துக்கம் விசாரித்தார்கள்.

பின்னர் இறந்து போன காளையை குளிப்பாட்டி நெற்றியில் பொட்டு வைத்து அலங்கரித்து சுற்றிலும் தடுப்பு கம்புகள் நட்டி, கம்பீரமாக காளை நிற்பதை போல் அமைத்தனர். பின்னர் வாழைக்கன்றுகளை சுற்றிலும் கட்டி, கழுத்தில் மாலைகள், கொம்புகளை சுற்றிலும் சலங்கை, ரூபாய் நோட்டு மாலை என காளையை அலங்கரித்தனர். அதோடு நின்று விடாமல் யாகம் வளர்த்து இறுதிச்சடங்கும் நடத்தப்பட்டது.

அதன்பிறகு வீட்டுக்கு அருகே உள்ள தோட்டத்தில் அந்த காளையை சோமசுந்தரம் புதைத்தார். இதுகுறித்து விவசாயி சோமசுந்தரம் கூறும்போது, இந்த காளையை வாங்கி வளர்த்ததில் இருந்தே எனக்கு அதிர்ஷ்டம் வந்தது. நான் மட்டுமல்ல எனது மனைவி, மகள் ஆகியோரும் மிகவும் பாசத்தோடு காளையை வளர்த்தோம். ஆனால் வயது முதிர்வால் அது எங்களை விட்டு பிரிந்துவிட்டது. இறுதி சடங்கு நடத்தி காளையை புதைத்து விட்டோம். அந்த இடத்தில் கோவில் கட்டி வழிபட முடிவு செய்துள்ளேன் என்றார். இவர் வேலப்பநாய்க்கன் வலசு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராவார்.

தான் வளர்த்த காளை இறந்ததும் உறவினர்கள், நண்பர்களை அழைத்து இறுதி சடங்கு நடத்தியதுடன் புதைத்த இடத்தில் கோவிலும் கட்டி வழிபட உள்ளதாக விவசாயி சோமசுந்தரம் கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story