வாகன திருட்டு வழக்கில் 5 பேர் கைது 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


வாகன திருட்டு வழக்கில் 5 பேர் கைது 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Sept 2017 4:30 AM IST (Updated: 12 Sept 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் வாகன திருட்டு வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சாத்தான்குளம்,

சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்தான்குளம் மெயின் பஜாரில் சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் அவர் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மகாதேவன்குளத்தைச் சேர்ந்த முருகன் மகன் கிருஷ்ணன் (வயது 21) என்பதும், அவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சாத்தான்குளம், தட்டார்மடம் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக கிருஷ்ணனின் நண்பர்களான திசையன்விளையைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் துரைராஜ் (23), மகாதேவன்குளத்தைச் சேர்ந்த தேவ ஆசீர்வாதம் மகன் தனசிங் (25), பொன்பாண்டி மகன் இசக்கி காளி (23), கீரைக்காரன்தட்டு கிராமத்தைச் சேர்ந்த அரிராமன் மகன் திவாகர் (22) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்து 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

Next Story