கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Sept 2017 4:30 AM IST (Updated: 12 Sept 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், அதுவரை 1.1.2016 முதல் 20 சதவீதம் இடைகால நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அடங்கிய ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. நேற்றும் போராட்டம் நீடித்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த போராட்டம் காரணமாக இங்குள்ள அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் பவுல் ஆபிரகாம், தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பிரான்சிஸ் ஹென்றி, தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் ராஜ்குமார் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் மூட்டா சிவஞானம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் ஜெகநாதன், செந்தூர்ராஜன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் மகேந்திரபாபு, தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் சுப்பிரமணியன், வேளாண்மை துறை அமைச்சு பணியாளர் சங்கம் விஜயகுமார், தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்கம் முத்துசாமி, அந்தோணி பட்டுராஜ் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் காலை 11.30 மணிக்கு தொடங்கி மதியம் 2.30 மணி வரை நடந்தது. 

Next Story