மத்திய அரசு நீட் தேர்வினை திரும்பப்பெற வேண்டும் தி.மு.க. வலியுறுத்தல்


மத்திய அரசு நீட் தேர்வினை திரும்பப்பெற வேண்டும் தி.மு.க. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Sept 2017 5:15 AM IST (Updated: 12 Sept 2017 3:17 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு நீட் தேர்வினை திரும்பப்பெற வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.

புதுச்சேரி,

தி.மு.க. தலைமை கழகம் அறிவுறுத்தலின்பேரில் நீட் தேர்வுக்கு விலக்குக்கோரி மத்திய அரசை வலியுறுத்தம் விதமாக நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தை புதுவை மாநிலத்தில் சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள தெற்கு மாநில தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

அவைத்தலைவர் சீத்தா.வேதநாயகம், துணை அமைப்பாளர்கள் அனிபால்கென்னடி, குணாதிலீபன், அமுதாகுமார், பொருளாளர் குமாரவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன், முன்னா எம்.எல்.ஏ. மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், வேலவன், சக்திவேல், தொகுதி செயலாளர்கள் சக்திவேல், நடராஜன், பாண்டு அரிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மாணவி அனிதாவின் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

*புதுவை தலைமை அஞ்சலகம் முன்பு சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வின் தெற்கு பகுதியை சேர்ந்த 12 தொகுதிகளை சேர்ந்த கழக தொண்டர்களோடு அனைத்து கட்சி தலைவர்களையும், தொண்டர்களையும் இணைத்துக்கொள்வது.

*தமிழகம், புதுவையில் தன்னிச்சையாக நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் முன்னெடுத்திருக்கும் அறப்போராட்டத்தை மத்திய மாநில அரசுகள் புரிந்துகொண்டு நீட் தேர்வினை திரும்பப்பெற வேண்டும்.

*அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 15–ந்தேதி நெல்லித்தோப்பு சுப்பையா சிலையிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது.

*திண்டுக்கல்லில் வருகிற 16–ந்தேதி நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் தெற்கு மாநில தி.மு.க. சார்பில் கழகத்தினர் திரளாக சென்று பங்கேற்று சிறப்பிப்பது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story