புதுவை அரசின் செயல்பாடு குறித்து மத்திய அரசிடம் புகார் பா.ஜனதா தலைவர் சாமிநாதன் தகவல்
புதுவை அரசின் செயல்பாடு குறித்து மத்திய அரசிடம் புகார் அளிக்க உள்ளதாக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
புதுச்சேரி,
புதுவையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில் மாநில அரசின் பரிந்துரையின்றி பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், நிர்வாகிகள் செல்வகணபதி, சங்கர் ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் இதுதொடர்பாக உரிய அதிகாரம் மிக்க நபரிடமிருந்து தனக்கு எந்தவித தகவலும் வரவில்லை என்று கூறி அவர்களுக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுத்துவிட்டார்.
இதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதன்பின் தங்களுக்கு எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கவேண்டும் என்று கூறி சட்டசபை செயலாளரிடம் கடிதம் கொடுத்தனர். ஆனால் அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்க முடியாது என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மத்திய அரசுக்கு பாரதீய ஜனதா சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் டெல்லி சென்று பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேச உள்ளனர்.
இதுதொடர்பாக பாரதியாரின் நினைவு நாளையொட்டி அவரது உருவசிலைக்கு மாலை அணிவித்த சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–
புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசு மத்திய அரசோடு தொடர்ந்து மோதல் போக்கினை கடைப்பிடித்து வருகிறார்கள். கவர்னரோடும் அவர்களுக்கு சமூக உறவு இல்லை. மத்திய அரசு புதுவைக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருந்தும் புதுவை ஆட்சியாளர்கள் மத்திய அரசோடு இணக்கமாக செயல்படாமல் உள்ளனர். இதனால் புதுவை நிர்வாகம் முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.
எங்களை எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசுதான் நியமித்தது. இதுதொடர்பாக புதுவை தலைமை செயலாளரும் அரசாணை பிறப்பித்தார். ஆனால் எங்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கவும், உரிய அங்கீகாரம் வழங்கவும் சபாநாயகர் மறுத்துவிட்டார். இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசும், சபாநாயகரும் செயல்படுகின்றனர்.
இதுதொடர்பாக நாங்கள் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை நாளை (புதன்கிழமை) சந்தித்து புகார் தெரிவிக்க உள்ளோம். இதுதொடர்பாக உரிய நடவடிக்கையினை மத்திய உள்துறை அமைச்சகம் எடுக்கும்.
இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.