காஞ்சீபுரம்–திருவள்ளூரில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்
காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூரில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்,
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமதுஉசேன் தலைமை தாங்கினார். போராட்டத்தை ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த தியாகராஜன் தொடங்கி வைத்தார்.
இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த அப்பர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் பாலச்சந்தர் மற்றும் வருவாய்துறை அலுவலர் சங்கம், சத்துணவு ஊழியர் சங்கம், நில அளவை அலுவலர் சங்கம், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம், கிராம உதவியாளர் சங்கம், சுகாதாரத்துறை சங்கம், மகளிர் துணைக்குழு மற்றும் பல்வேறு ஆசிரியர்கள் அமைப்புகளை சேர்ந்தவர்கள் என சுமார் ஆயிரத்து 500–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் எம்.ஜி.ஆர். சிலை அருகே திருவள்ளூர் மாவட்ட ஜாக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் நடந்த போராட்டத்துக்கு அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் தலைமை தாங்கினார்.
இதில் உயர்மட்டக்குழு உறுப்பினர் சீனிவாசன், நிர்வாகிகள் குப்புசாமி, ஜம்பு, ஞானசேகரன், அருணன், கலைச்செல்வி, அரசு ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் இளங்கோவன், அருள்டேனியல் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
அப்போது மழை பெய்தது. ஆனாலும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் குடை பிடித்தபடி கொட்டும் மழையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.