நாகர்கோவில் நகராட்சி அலுவலகத்தில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. திடீர் முற்றுகை போராட்டம்
நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவேண்டும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ நேற்று நாகர்கோவில் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் நகராட்சிக்குட்பட்ட பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவேண்டும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ நேற்று நாகர்கோவில் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். ஆனால், அந்த நேரத்தில் ஆணையாளர், நகராட்சி பொறியாளர் போன்ற முக்கிய அதிகாரிகள் யாரும் அலுவலகத்தில் இல்லை எனத்தெரிகிறது. இதைதொடர்ந்து, ஆணையாளரை காணவில்லை என்ற விளம்பர பதாகை ஏந்தி சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதில், தி.மு.க.நகர செயலாளர் மகேஷ், பொதுக்குழு உறுப்பினர் ஷேக்தாவூது, இளைஞரணி அமைப்பாளர் சிவராஜ், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் நவீன்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர், சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:–
நாகர்கோவில் நகராட்சியில் உள்ள 52 வார்டுகளிலும் சாலைகளை சீரமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பலமுறை மனுகொடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 11 மாதங்களாக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. நகராட்சி ஆணையாளர் தன்னை விளம்பரப்படுத்தி நேர்மையானவர் என காட்டிக்கொள்கிறாரே தவிர வளர்ச்சிப் பணிகளை அவர் மேற்கொள்ளவில்லை. ஆணையாளர் நகராட்சி பணிகளை மேற்கொள்ளாவிட்டால் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். பணிகளை தொடர்ந்து தாமதப்படுத்தினால், தி.மு.க.சார்பில் வருகிற 25–ந்தேதி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.