எடப்பாடி பழனிசாமி–ஓ.பன்னீர்செல்வம் உருவபொம்மை எரிப்பு தினகரன் ஆதரவாளர்கள் 35 பேர் கைது


எடப்பாடி பழனிசாமி–ஓ.பன்னீர்செல்வம் உருவபொம்மை எரிப்பு தினகரன் ஆதரவாளர்கள் 35 பேர் கைது
x
தினத்தந்தி 13 Sept 2017 4:30 AM IST (Updated: 12 Sept 2017 10:54 PM IST)
t-max-icont-min-icon

சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் ரத்து செய்யப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி–ஓ.பன்னீர்செல்வம் உருவபொம்மையை எரித்த தினகரன் ஆதரவாளர்கள் 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

அ.தி.மு.க.(அம்மா), அ.தி.மு.க.(புரட்சி தலைவி அம்மா) ஆகிய அணிகள் சார்பில் பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் ரத்து என்றும், டி.டி.வி.தினகரன் அறிவித்த நியமனங்கள், அறிவிப்புகள் செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தினகரன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை ரெயிலடியில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு ஒரத்தநாடு சேகர் தலைமை தாங்கினார். பின்னர் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் உருவபொம்மையை எரிப்பதற்காக ஜீப்பில் எடுத்து வரப்பட்டது. இதை அறிந்த போலீசார் அந்த ஜீப்பை நோக்கி சென்றனர்.

போலீசார் வருவதை பார்த்த டிரைவர், ஜீப்பை அந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு எடுத்து சென்றார். உடனே போலீசார் அந்த ஜீப்பில் தொங்கிக் கொண்டு சென்று ஜீப்பை நிறுத்தும்படி டிரைவரிடம் கூறினர். அவர் நிறுத்தியவுடன் ஜீப்பில் இருந்த உருவபொம்மையை எடுக்க போலீசார் முயற்சி செய்தபோது, தினகரன் ஆதரவாளர்களும் எடுக்க முயற்சி மேற்கொண்டனர். ஒரே நேரத்தில் போலீசாரும், தினகரன் ஆதரவாளர்களும் உருவபொம்மையை எடுத்ததால் ஒருவரையொருவர் அங்கும், இங்குமாக இழுத்தனர். இதனால் அவை பிய்ந்தது. இதையடுத்து அந்த பிய்ந்த உருவபொம்மையை போலீசாரிடம் இருந்து பறித்து, அவைகளை தீ வைத்து தினகரன் ஆதரவாளர்கள் எரித்தனர்.

அப்போது அவர்கள், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னர்செல்வம், வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோருக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பியதுடன் தகாத வார்த்தைகளாலும் திட்டினர். பின்னர் அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து மினிபஸ்சில் ஏற்றி சென்றனர். மொத்தம் 35 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story