ஜாக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் ராமநாதபுரத்தில் சாலை மறியல்; 730 பேர் கைது

ராமநாதபுரத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக 730 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்,
புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை தொடர வேண்டும், 8–வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும், இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், தமிழகத்தில் நீட் தேர்வினை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் (ஜாக்டோ–ஜியோ அமைப்பு) காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி நாள்தோறும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார்.
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் லாரன்ஸ், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துமுருகன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் நைனாமுகம்மது, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் எமர்சன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இதில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் நெற்றியில் பட்டை நாமம் போட்டுக்கொண்டு, அரசு தங்களை ஏமாற்றி விட்டதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் திரளாக நெடுஞ்சாலைக்கு சென்று அங்கு அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 264 பெண்கள் உள்பட 730 பேரை கைது செய்தனர்.