பொதுக்குழு தீர்மானத்துக்கு கண்டனம்: முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மை எரிப்பு
சென்னையில் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து மாவட்டத்தின் பல இடங்களில் போராட்டம் நடந்தது.
சென்னையில் நேற்று நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கண்டித்து டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். காரியாபட்டியில் நேற்று மாலை திரண்டு வந்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எரித்தனர். மேலும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.
இந்த போராட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் கே.கே.சிவசாமி, ஒன்றிய செயலாளர்கள் காரியாபட்டி முருகன், திருச்சுழி குருசாமி, நரிக்குடி பூமிநாதன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மச்சேஸ்வரன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் வாழை முத்துசாமி, பொதுக்குழு உறுப்பினர் பழனி, காரியாபட்டி நகர பாசறை செயலாளர் சந்துரு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பழனிசாமி, கூட்டுறவு வங்கி தலைவர் சீமைராஜ் மற்றும் நாலூர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
இதேபோல ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் அருகே நகராட்சி முன்னாள் கவுன்சிலர் மாரியப்பன், வக்கீல் கண்ணன் ஆகியோர் முதல்–அமைச்சரின் உருவபொம்மையை கொளுத்தினர். சேத்தூரில் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகையாபாண்டியன் தலைமையில் நடந்த போராட்டத்தில் துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.