நம்பியூர் அருகே பொது இடத்தில் தகராறு செய்தவரை தட்டிக்கேட்டவருக்கு கொக்கி குத்து
நம்பியூர் அருகே பொது இடத்தில் தகராறு செய்தவரை தட்டிக்கேட்டவரை கொக்கியால் குத்திய சுமை தூக்கும் தொழிலாளியை போலீசார் கைது செய்தார்கள்.
நம்பியூர்,
நம்பியூர் அருகே உள்ள ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை சண்முகம் நம்பியூர்–கடத்தூர் ரோட்டில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது, ரோட்டின் ஓரத்தில் இருந்த ஒரு மோட்டார்சைக்கிளையும், கடைமுன் இருந்த பொருட்களையும், பொலவபாளையத்தை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி வேலன் என்கிற வேலுச்சாமி என்பவர் சேதப்படுத்திக்கொண்டு இருந்தார். உடனே அங்கு சென்ற சண்முகம், ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்? என்று அவரை தட்டிக்கேட்டார்.
அதற்கு வேலன் என்னை கேள்வி கேட்க நீ யார்? என்று ஆவேசம் அடைந்து தான் வைத்திருந்த மூட்டை தூக்க பயன்படும் இரும்பு கொக்கியை சண்முகத்தின் கழுத்தில் குத்தினார். இதனால் அதே இடத்தில் சண்முகம் மயங்கினார்.
இந்த சம்பவத்தை கண்ணில் கண்ட அந்த பகுதி மக்கள் உடனே 108 ஆம்புலன்சை வரவழைத்து சண்முகத்தை கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு முதலுதவி செய்தபின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுபற்றி புகாரின்பேரில், நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை இரும்பு கம்பியால் குத்திய வேலனை கைது செய்தார்கள். பின்னர் அவர் கோபி 2–ம் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.